பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் நிறைவாக மலைக்கோயிலில் இன்று (வெள்ளிக்கிழமை) திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நவ.2-ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. பக்தர்களும் காப்புக்கட்டி விரதம் இருந்தனர். இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று (நவ.7) இரவு நடைபெற்றது. இதையடுத்து, சூரன்களை வதம் செய்து வெற்றி பெற்ற சண்முகருக்கு வள்ளி, தெய்வானையை மணம் முடித்து வைக்கும் வைபவம் இன்று வெள்ளிக்கிழமை (நவ.8) காலை மலைக்கோயிலில் நடைபெற்றது.
கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லட்சுமி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். திருக்கல்யாணத்தில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மணக்கோலத்தில் அருள்பாலித்த சண்முகர், வள்ளி, தெய்வானையை வழிபட்டனர். திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு கல்யாண விருந்து பரிமாறப்பட்டது. இன்று (நவ.8) இரவு பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.