திருப்போரூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி வெள்ளி குதிரையில் வந்து சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். 
ஆன்மிகம்

சென்னை, புறநகர் முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா: அரோகரா கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

செய்திப்பிரிவு

சென்னை: கந்த சஷ்டி விழாவையொட்டி, சென்னை மற்றும் புறநகரில் உள்ள முருகன் கோயில்களில் சூரசம்ஹார நிகழ்வு நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். சென்னை வடபழனி முருகன் கோயிலில் மகா கந்த சஷ்டி விழா கடந்த 1-ம் தேதி விநாயகரின் மூஷிக வாகன புறப்பாட்டுடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நாளான நேற்று உச்சி காலத்துடன் லட்சார்ச்சனை நிறைவு பெற்றது. தொடர்ந்து தீர்த்தவாரி, கலாசாபிஷேகம் நடந்தது. மாலை 6 மணிக்கு அம்பாளிடம் வேல் பெற்று, சூரபத்மனை வதம் செய்ய முருகப் பெருமான் புறப் பட்டார். நேற்று இரவு 8 மணிக்கு சூர சம்ஹாரம் தொடங்கியது.

சூரபத்மன் வதம்: முருகப் பெருமான் படை சூழ, யானை, சிங்கம், ஆடு உள்ளிட்ட ரூபங்களில் வந்த சூரபத்மனை வேலால் வதம் செய்யும் காட்சி அரங்கேறியது. அதன் பின், மாமரமாக மாறிய சூரன், அதை பிளந்தபோது, சேவல், மயிலாக மாறி காட்சியளித்தார். அப்போது, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பினர்.

இதேபோல், திருப்போரூர் முருகன் கோயிலில் மாலை 6 மணிக்கு 16 கால் மண்டபத்தில் வெள்ளிக் குதிரையில் முருகப்பெருமான் எழுந்தருளினார். முதல் ஐந்து சூரன்களை முருகப் பெருமானின் படைத்தளபதி வீரபாகு வதம் செய்ய, முருகப் பெருமான் போர்க்கோலத்தில் தங்க வேலை ஏந்தியபடி வெள்ளி குதிரை வாகனத்தில் வந்து ஆறாவது சூரனான சூரபத்மனை வதம் செய்தார். குன்றத்தூர் முருகன் கோயிலில் முருகன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மலையின் மேல் இருந்து கோயில் மலை அடிவாரத்துக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் சூரனை வதம் செய்து சேவல் மற்றும் கொடியுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

திருத்தணி முருகன் கோயிலில் 5 டன் மலர்களால் உற்சவர் சண்முகருக்கு
வெகுவிமரிசையாக புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

அப்போது தேவர்கள், அசுரர்கள் போர்புரியும் காட்சிகளும் அரங்கேற்றப்பட்டன. இந்த விழாவைத் தொடர்ந்து நகைமுக வள்ளி உடனுறை கந்தழீஸ்வரர் கோயிலில் வேல் ஒப்படைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

புஷ்பாஞ்சலி: சூரனை வதம் செய்த முருகன் சினம் தணிந்து, வள்ளியை மணந்து, அமர்ந்த தலம் திருத்தணி என்பதால் திருத்தணி முருகன் கோயிலில் புஷ்பாஞ்சலி நடைபெறுவது வழக்கம்.

அந்தவகையில், திருத்தணி முருகன் கோயிலில் 5 டன் மலர்களால் உற்சவர் சண்முகருக்கு வெகுவிமரிசையாக புஷ்பாஞ்சலி நடைபெற்றது. தொடர்ந்து, உற்சவர் சண்முகருக்கு அபிஷேகம் செய்யப்பட்ட மலர்களை பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு அள்ளிச் சென்றனர்.

திருத்தணி முருகன் கோயிலில் 5 டன் மலர்களால் உற்சவர் சண்முகருக்கு
வெகுவிமரிசையாக புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

இதேபோல் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், கந்தக்கோட்டம், பெசன்ட்நகர் அறுபடைவீடு முருகன் கோயில், மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர், வல்லக்கோட்டை உள்பட சென்னை மற்றும் புறநகர் முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருப்போரூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி வெள்ளி குதிரையில் வந்து சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.திருத்தணி முருகன் கோயிலில் 5 டன் மலர்களால் உற்சவர் சண்முகருக்கு வெகுவிமரிசையாக புஷ்பாஞ்சலி நடைபெற்றது. குன்றத்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹார திருவிழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த முருகப் பெருமான்.

SCROLL FOR NEXT