திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நீண்ட வரிசையில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகத் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உள்ளது. இத்தலத்துக்குத் தீபாவளி தொடர் விடுமுறையையொட்டி 5-வது நாளாக நேற்று பக்தர்கள் குவிந்தனர். தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.
அண்ணாமலையார் கோயில் நடை நேற்று அதிகாலை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர், சுவாமி தரிசனம் செய்ய ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாகப் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பொது தரிசன பாதையில் சுமார் 3 மணி நேரமும், கட்டண தரிசன பாதையில் சுமார் ஒன்றரை மணி நேரம் வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். பின்னர், உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் விளக்கேற்றி வழிபட்டனர். இதையடுத்து கால பைரவரை வணங்கினர்.
மேலும் மகா தீபம் ஏற்றப்படும் திரு அண்ணாமலையைப் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மலையே மகேசன் எனப் போற்றி வணங்கப்படும் மலையை வலம் வந்த பக்தர்கள், நமசிவாய என முழக்கமிட்டு வழிபட்டனர்.