கோ
யில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றனர் முன்னோர். ஆனால், எங்கும் எதிலும் நிறைந்திருப்பவரே கடவுள் என்பதை எல்லா மதங்களுமே வலியுறுத்துகின்றன. அப்படியானால் ஆலயங்கள் எதற்கு என்ற கேள்வி எழலாம். இதற்கு ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விளக்கம் தரலாம். இயேசு கொடுத்த விளக்கம் யூதப் பழமைவாதிகளைக் கோபப்படுத்தியது. தந்தையாகிய கடவுள் வசிக்கும் வீட்டை சந்தைக் கடையாக மாற்றியவர்களை அடித்துத் துரத்தினார். கடவுள் வாழும் ஆலயத்தை இரண்டுவிதமாக இயேசு எடுத்துக்காட்டினார். யோவான் நற்செய்தி அதிகாரம் இரண்டில் இறைவசனங்கள் 13 முதல் 22 வரை படித்தால் இதைப் பற்றி அறியலாம்.
காணாவூர் திருமணத்தில் திராட்சை ரசம் தீர்ந்துபோன நேரத்தில் தன் அன்னை மரியாளின் வேண்டுகோளை ஏற்றுத் தண்ணீரைத் திராட்சை ரசமாக மாற்றி அருள் அடையாளத்தை நிகழ்த்தினார் இயேசு. பின்னர் அங்கிருந்து அவரும் அவருடைய அம்மாவும் சீடர்களும் கப்பர்நகூம் நகரத்துக்குப் போய் அங்கே சில நாட்கள் தங்கினார்கள்.
பின்னர், யூதர்களுடைய விடுதலைத் திருவிழாவாகிய பாஸ்கா பண்டிகை நெருங்கிவிட்டிருந்ததால் இயேசு தன் சீடர்களுடன் கடவுளாகிய தந்தையின் பேராலயம் அமைந்திருந்த எருசலேமுக்குப் புறப்பட்டார். சுற்றுவட்டாரங்களில் உள்ள எல்லா நகரங்களில் இருந்தும் எருசலேம் தேவாலயத்துக்கு வந்து கடவுளுக்குப் பலி செலுத்தி பாஸ்கா பண்டிகையைக் கொண்டாடுவதை யூதர்கள் புனிதமாகக் கருதினார்கள். எனவே, யூத குலத்தில் பிறந்த இயேசுவும் பாஸ்கா பண்டிகையைக் கொண்டாட எருசலேமுக்குப் போனார்.
அவர் ஆலயத்துக்குள் நுழைந்ததும் அங்கே கண்ட காட்சிகள் அவரை அதிர்ச்சியடைச் செய்தன. ஆலய வளாகத்துக்குள் அமைதி இல்லை. ஆடு, மாடு, புறா போன்றவற்றை விற்பவர்களையும் மேஜைகளைப் போட்டு அதில் நாணயமாற்றம் செய்துகொண்டிருந்த தரகர்களையும் கண்டார். அவருக்குக் கோபம் தலைக்கேறியது. உடனே, கயிறுகளால் ஒரு சாட்டை செய்தார். ஆடு மாடுகளையும் ஆலயத்தை வணிக வளாகம் ஆக்கிய அனைவரையும் ஆலயத்திலிருந்து விரட்டி அடித்தார். நாணயம் மாற்றுபவர்களின் காசுகளைக் கீழே கொட்டி, அவர்களுடைய மேஜைகளைக் கவிழ்த்துப்போட்டார். புறா விற்பவர்களை நோக்கி,
“இதையெல்லாம் இங்கிருந்து எடுத்துக்கொண்டு போங்கள்! என் தந்தையுடைய வீட்டை இனியும் சந்தைக்கடை ஆக்காதீர்கள்!” என்று உரக்கக் கத்தினார். அப்போது, “ உங்களுடைய வீட்டின் மேலுள்ள பக்தி வைராக்கியம் எனக்குள் பற்றியெரியும்” என்று யூதர்களின் திருச்சட்டத்தில் எழுதப்பட்டிருந்த வசனத்தை அவருடைய சீடர்கள் நினைத்துப் பார்த்தார்கள். பொறுமையும் சாந்தமும் மிகுந்த தன் வார்த்தைகளால் மக்களைக் கட்டிப்போடும் இயேசுவா இது என்று சீடர்கள் வியந்துபோனார்கள்.
இயேசுவின் இந்தத் துணிச்சலான செயலைக் கண்டு ஆத்திரம் அடைந்த யூத மத அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அவரிடம், “ இப்படியெல்லாம் செய்ய உனக்கு அதிகாரம் இருக்கிறது என்பதை எங்களுக்கு நிரூபிக்க என்ன அடையாளத்தைக் காட்டப்போகிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, “இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாட்களில் இதை எழுப்புவேன்” என்று சொன்னார். அப்போது யூதர்கள், “இந்த ஆலயத்தைக் கட்ட வருஷங்கள் எடுத்தன, நீ இதை மூன்று நாட்களில் எழுப்பிவிடுவாயோ?” என்றார்கள்.
ஆனால், அவர் தன்னுடைய உடலாகிய ஆலயத்தைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார். இயேசு அடிக்கடி அப்படிச் சொன்னதை அவர் கொல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து வந்தபோது சீடர்கள் நினைத்துப் பார்த்தார்கள். அதனால், வேதவசனங்களையும் அவர் சொன்ன வார்த்தைகளையும் நம்பத் தொடங்கினார்கள்.
சீடர்களின் அழுத்தமான நம்பிக்கை இயேசுவின் பூமி வாழ்க்கை முடிந்தபிறகே வலுப்பெற்றது எனலாம். ஆனால், சீடர்களாக இல்லாதவர்கள், பாஸ்கா பண்டிகை சமயத்தில் அவர் எருசலேம் தேவாலயத்தைத் துணிந்து தூய்மைப்படுத்தியபின் செய்த அடையாளங்களைப் பார்த்து, நிறையப் பேர் அவருடைய பெயரில் நம்பிக்கை வைத்தார்கள். ஆனால், இயேசு அவர்களை நம்பவில்லை. ஏனென்றால், அவர்கள் எல்லாரையும் பற்றி அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. எந்த மனிதனைப் பற்றியும் அவருக்கு யாரும் எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஏனென்றால், அவர்களுடைய இதயத்தில் என்ன இருந்ததென்று அவருக்குத் தெரிந்திருந்தது.
ஆலய வளாகத்துள் வந்து மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகக் கத்தி பிராத்த்தனை செய்கிறவர்களை அவர் அறிவார். ஆனால், கடவுள் ஆலயத்தில் இருந்து நம் குரல்களைக் காதுகொடுத்துக் கேட்கும் அதேநேரம், அவர் நம் உள்ளத்திலும் குடியிருக்க விரும்புகிறார். கடவுள் குடியிருக்கும் உள்ளத்தைத் தாங்கியிருக்கும் நம் உடலும் கோயில்தான் என்பதை இயேசு தெளிவாக எடுத்துக்காட்டினார். ஆனால், பழமைவாத யூதர்கள் அதைப் புரிந்துகொள்ளவில்லை. இன்றும் கூட ஆலயத்தில் கடவுளைத் தொழும் பலரது உடல் கடவுள் குடியிருக்கத் தகுதியானதாக இல்லை.