திருவாரூர்: கூத்தனூரில் உள்ள சரஸ்வதி அம்மன் கோயிலில் நேற்று விஜயதசமி விழாவையொட்டி, தங்கள் குழந்தைகளை கோயிலுக்கு அழைத்து வந்திருந்த பெற்றோர், நெல்மணிகளைப் பரப்பி, அதில் குழந்தைகளை எழுத வைத்து வித்யாரம்பம் செய்து வழிபாடு நடத்தினர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் கூத்தனூரில் பிரசித்தி பெற்ற சரஸ்வதி அம்மன் கோயில் உள்ளது. ஒட்டக்கூத்தரால் பாடல் பெற்ற தலமான இங்கு ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி விழா விமரிசையாக நடைபெறும்.
அந்த வகையில், சரஸ்வதி பூஜையன்று அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு, வெண்ணிற ஆடை உடுத்தி, பாததரிசனம் நடைபெற்றது. நேற்றுமுக்கிய நிகழ்வான விஜயதசமி கொண்டாடப்பட்டது. அம்மனை வழிபட வந்த பக்தர்கள் நோட்டுபேனா, புத்தகம், சிலேட்டு போன்ற கல்வி உபகரணங்களை சரஸ்வதி அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.
2 ஆயிரம் குழந்தைகள்... மேலும், குழந்தைகளை அழைத்து வந்த பெற்றோர், ஒரு தாம்பாளத்தில் நெல்மணிகளைப் பரப்பி, அதில் ‘அ’ என எழுதவைத்து வித்யாரம்பம் செய்து வைத்தனர். தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்கள் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மாநிலம் முழுவதும் உள்ள அரசு, நிதியுதவி பெறும் பள்ளிகளில் மழலையர் மற்றும் 1-ம் வகுப்பில் ஒரே நாளில் 2 ஆயிரம் குழந்தைகள் புதிதாக சேர்ந்துள்ளதாக தெரிகிறது.