ஆன்மிகம்

ஏழுமலையான் கோயிலில் கொட்டும் மழையில் சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பர் உலா

என்.மகேஷ்குமார்

திருமலை: திருப்பதி பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான நேற்று காலை சூரிய பிரபை வாகனத்தில் உற்சவ மூர்த்தியான மலையப்பர், சூரிய நாராயணராய் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

வாகன சேவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே திருமலையில் மழை பெய்ய தொடங்கியது. இதனால் சூரிய பிரபை வாகன சேவை சிறிது நேரம் வரை கூடாரம் தாங்கியபடி நடத்தப்பட்டது. அப்போது கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். வாகன சேவைக்கு முன், காளை, குதிரை, யானை போன்ற பரிவட்டங்களும், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நடன கலைஞர்களும், ஜீயர்கள், தேவஸ்தான அதிகாரிகளும். திரளான பக்தர்களும் பங்கேற்றனர்.

சூரிய பிரபை வாகனத்தை தொடர்ந்து நேற்றிரவு சந்தி ரபிரபை வாகனத்தில் மலையப்பர் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருமலை சந்திரனுக்குரிய திருத்தலமாகும். எனவேதான் இங்கு ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இரவு கருட வாகனத்தில் மலையப்பர் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். மேலும், பிரம்மோற்சவ நாட்களில் முத்து பல்லக்கு வாகனமும் சந்திர திருத்தலம் என்பதாலேயே நடைபெறுகிறது. இதன் காரணமாக நேற்றிரவு சந்திரபிரபை வாகனத்தில் மலையப்பர் எழுந்தருளினார். இதில் பலர் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர்.

இன்று தேர்த்திருவிழா: பிரம்மோற்சவத்தின் 8-வது நாளான இன்று காலை தேர் திருவிழா நடைபெற உள்ளது. தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். இதனை தொடர்ந்து பிரம்மோற்சவத்தின் இறுதி வாகன சேவையான குதிரை வாகன சேவை நடைபெற உள்ளது. பின்னர் நாளை காலை கோயில் குளத்தில் வராக சுவாமி கோயில் அருகே சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பின்னர் நாளை மாலை பிரம்மோற்சவ கொடி இறக்க நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவம் நிறைவடைய உள்ளது.

SCROLL FOR NEXT