சிம்ம வாகனத்தில் யோக முத்திரையில் மலையப்பர் 
ஆன்மிகம்

திருப்பதி பிரம்மோற்சவம் 3-ம் நாள் விழா: சிம்ம வாகனத்தில் மலையப்பர் பவனி

என்.மகேஷ்குமார்

திருமலை: திருப்பதி பிரம்மோற்சவத்தின் 3-ம் நாளான நேற்று காலை சிம்ம வாகனத்தில் யோக முத்திரையில் உற்சவரான மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

வாகன மண்டபத்தில் இருந்துகாலை 8 மணிக்கு புறப்பட்ட மலையப்பரை காண மாட வீதிகளில் பக்தர்கள் திரண்டிருந்தனர். வாகனத்தின் முன்பு நடன கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக அமைந்திருந்தன. காளை, குதிரை, யானை பரிவட்டங்கள், ஜீயர்களின் சிஷ்ய குழுவினர் முன்னே செல்ல யோக முத்திரையில் மலையப்பர் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதனை தொடர்ந்து, மாலையில் கோயிலுக்குள் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் ஸ்நபன திருமஞ்சன நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்தேறின. இதில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் உற்சவர்களுக்கு கிவி மற்றும் பைனாப்பிள், திராட்சை போன்ற பழங்களில் முத்து, சந்தனம், துளசி, வெட்டிவேர், மஞ்சளை இணைத்து மாலையும், கிரீடங்களும் செய்து அலங்காரம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்றிரவு முத்துப்பல்லக்கில் தேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

SCROLL FOR NEXT