ஆன்மிகம்

வேண்டும் வரம் அருளும் நவராத்திரி வழிபாடு 4: மகாலட்சுமி திருக்கோலம்

செய்திப்பிரிவு

கொலு வைப்பது குறித்து பதினெட்டு புராணங்களில் ஒன்றான மார்க்கண்டேய புராணத்தில் கூறப்பட்டு உள்ளது.

சுரதா என்ற மகாராஜா, தனது பகைவர்களை வெற்றி கொள்வதற்காக, குரு சுமதாவிடம் ஆலோசனை கேட்கிறார். குருவும் அவருக்கு தகுந்த ஆலோசனை வழங்குகிறார். குரு கூறியபடி, தூய்மையான ஆற்று மணலைக் கொண்டு காளி ரூபத்தை செய்கிறார் மகாராஜா சுரதா. அதை காளியாக அலங்கரித்து, தெய்வத்தின் மீது பற்றுடன் உண்ணா நோன்பிருந்து மனதாலும் மெய்யாலும் வழிபடுகிறார்.

அம்பிகை அவரது வேண்டுதலை நிறைவேற்றி, அவர் விரும்பியபடி அரக்கர்களையும் பகைவர்களையும் அழித்து, பின்பு ஒரு புதிய யுகத்தையே உருவாக்குகிறாள். மனம் மகிழ்ந்த மகாராஜா சுரதா, அம்பிகைக்கு நன்றி தெரிவிக்க, அம்பிகையும், “ஐம் பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையை வைத்து என்னை பூஜித்தால் நான் உனக்கு சகல சுகங்களையும், சௌபாக்கியங்களையும் அளிப்பேன்” என்று அருள்பாலிக்கிறாள். இதனால்தான் நவராத்திரியில் கொலு வைத்து அம்மனைப் பூஜிக்கும் மரபு ஏற்பட்டது.

இப்போது காலத்துக்கேற்ப மரம், பீங்கான், கண்ணாடியிலும் பொம்மைகள் செய்யப் பட்டு கொலுவில் வைக்கப்படுகின்றன. நவராத்திரிக்கு தெய்வம், மகான்கள் ஆகியோரை பொம்மைகளாக வைத்து வழிபாடு நடைபெறுகிறது. நவராத்திரி நான்காம் நாளான சதுர்த்தி திதியில் சிம்மாசனத்தில் வெற்றித் திருக்கோலத்தில் அமர்ந்துள்ள மகாலட்சுமியை வழிபட வேண்டும். 5 வயது சிறுமியை ரோகிணி வேடத்தில் நவக்கிரக நாயகியாக நினைத்து பூஜிக்க வேண்டும். முன்னதாக அட்சதை கொண்டு படிக்கட்டு போல கோலமிட வேண்டும். கஸ்தூரி மஞ்சள், முத்து போன்றவற்றால் மாலை அணிவித்து, பைரவி, சௌராஷ்டிரம் ராகங்களில் பாடல்கள் பாடி, செந்தாமரை, ரோஜா, ஜாதி மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

தயிர் சாதம், உளுந்து வடை, அவல் கேசரி, பால் பாயாசம், கற்கண்டு பொங்கல், கதம்ப சாதம், பட்டாணி சுண்டல் ஆகியவற்றில் முடிந்ததை நைவேத்தியம் செய்ய வேண்டும். நவராத்திரி நான்காம் நாள் பூஜையால் கடன் தொல்லை தீரும்.

SCROLL FOR NEXT