திருமலை: திருப்பதி பிரம்மோற்சவத்தின் 2-ம் நாளான நேற்று காலை சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். புரட்டாசி 3-வது சனிக்கிழமை என்பதால் இதில் பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஏழுமலையானுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் திருமலையில் பிரம்மோற்சவம் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. பிரம்மனே முன்னின்று நடத்துவதாக ஒரு ஐதீகமும் இந்த பிரம்மோற்சவத்திற்கு உண்டு. கடந்த 4-ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரம்மோற்சவம், வரும்12-ம் தேதி காலை சக்கர ஸ்நான நிகழ்ச்சியுடன் நிறைவடைய உள்ளது.
இதில் 2-ம் நாளான நேற்று காலை, வாசுகியாக கருதப்படும் சின்ன சேஷ வாகனத்தில் உற்சவரான மலையப்பர், ஸ்ரீ கிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளினார். புரட்டாசி 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு திருமலைக்கு வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், காலையிலேயே மாட வீதிகளில் குவிந்தனர். அப்போது குதிரை, காளை, யானை போன்ற பரிவட்டங்கள் முன்னால் செல்ல, ஆந்திரா, கர்நாடகா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஒரிசா, மகாராஷ்டிரா, மணிப்பூர், பஞ்சாப் என பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நடனக் கலைஞர்கள் வாகன சேவையில் பங்கேற்று சிறப்பித்தனர். மேலும், ஜீயர் குழுவினர் நாலாயிர திவ்ய பிரபந்தங்களை பாடியவாறு செல்ல, இவர்களுக்கு பின்னால் சின்ன சேஷ வாகனத்தில் கம்பீரமாக மலையப்பர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அப்போது ‘கோவிந்தா, கோவிந்தா’ என பக்தர்கள் விண்ணதிர முழக்கம் எழுப்பினர். சுமார் 2 மணி நேரம் வரை நடைபெற்ற இந்த வாகன சேவையில் தேவஸ்தான அதிகாரிகளும் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து இரவு அன்ன வாகனத்தில் மலையப்பர் மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.