திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு அரசு சார்பில் சுவாமிக்கு பட்டு வஸ்திரத்தை காணிக்கையாக வழங்கினார். இரவு பெரிய சேஷ வாகனத்தில் உற்சவரான மலையப்பர் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர நவராத்திரி பிரம்மோற்சவ விழா, இன்று வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி, சமேதமாய் மலையப்பர், சேனாதிபதியான விஸ்வக்சேனர் ஆகியோர் முன்னிலையில் மாலை, தங்க திருச்சியில் தங்க கொடிமரம் வரை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டனர். அப்போது மேள தாளங்கள் முழங்க, வேத பண்டிதர்கள் வேதங்கள் ஓத, கருடன் சின்னம் பொறித்த கொடி, தங்ககொடி மரத்தில் ஏற்றப்பட்டது. அந்த சமயத்தில் கோவிந்தா, கோவிந்தா என கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஜீயர்கள், அர்ச்சகர்கள், தேவஸ்தான அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து இன்று மாலை திருமலைக்கு வந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தம்பதி சமேதமாக கோயில் எதிரே உள்ள பேடி ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து, ஆந்திர அரசு தரப்பில் பட்டு வஸ்திரத்தை தலையின்மீது சுமந்து வந்தபடி கோயில் அர்ச்சகர்களிடம் சமர்ப்பித்தார். பின்னர், அவர் ஏழுமலையானை தரிசனம் செய்தார். தேவஸ்தான அதிகாரிகள் சியாமள ராவ், வெங்கைய்ய சவுத்ரி ஆகியோர் அவருக்கு தரிசன ஏற்பாடுகளை செய்தனர். பின்னர், ரங்கநாயக மண்டபத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த, பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர். பின்னர் சந்திரபாபு 2025 ஆண்டுக்கான தேவஸ்தான காலண்டர்களையும், டைரிக்களையும் வெளியிட்டார்.
பெரிய சேஷ வாகனத்தில் மலையப்பர் ஊர்வலம்: பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியதை தொடர்ந்து, முதல் நாளான இன்றிரவு ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் உற்சவரான மலையப்பர் ஆதிசேஷனாக கருதப்படும், பெரிய சேஷ வாகனத்தின் மீது எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதிலும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தம்பதி சமேதமாய் கலந்து கொண்டார். வாகன சேவையில் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் என மொத்தம் 16 மாநிலங்க்களை சேர்ந்த நடன கலைஞர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
வாகன சேவையின் முன், காளை, குதிரை, யானை போன்ற பரிவட்டங்கள் செல்ல, அவர்களுக்கு பின் ஜீயர் கோஷ்டியினர் நாலாயிரம் திவ்ய பிரபந்தங்களை பாடிய படி செல்ல, இவர்களை பின் தொடர்ந்து 16 மாநிலங்களை சேர்ந்த நடன கலைஞர்கள் நடனமாடியபடி செல்ல, உற்சவ மூர்த்திகளின் மாட வீதி உலா மிக சிறப்பாக நடந்தது. நாளை சனிக்கிழமை காலை சின்ன சேஷ வாகனத்திலும், இரவு அன்ன வாகனத்திலும் உற்சவரான மலையப்பர் 4 மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.