சும்பன், நிசும்பன் என்ற அரக்கர்கள் தேவர்களை வீழ்த்தி இன்னல்கள் விளைவித்து வந்தனர். இவர்களின் அழிவுக் காலத்தில், ஆதிபராசக்தியிடம் இருந்து கவுசிகியும், காளிகா என்ற காலராத்திரியும் தோன்றினர். காளிகாவுக்கு துணையாக முப்பெரும்தேவியின் வடிவான அஷ்டமாதர்களும் அஷ்டராத்திரிகளாகத் தோன்றினர்.
பிராம்மணி என்ற பிரம்ம சக்தி அன்ன வாகனத்தில் அட்ச மாலை, கமண்டலத்துடனும், வைஷ்ணவி என்ற விஷ்ணு சக்தி கருட வாகனத்தில் சங்கு, சக்கரம், கதை, தாமரை மலருட னும், மகேஸ்வரி என்ற சிவனின் சக்தி ரிஷப வாகனத்தில் திரிசூலம், வரமுத்திரையுடனும், கவுமாரி என்ற கார்த்திகேய சக்தி மயூர வாகனத்தில் வேலாயுதத்துடனும், மாகேந்திரி என்ற இந்திரனின் சக்தி ஐராவதத்தில் வஜ்ராயுதத்துடனும், வாராஹி என்ற வாராஹியுடைய சக்தி எருமை வாகனத்தில் கலப்பையுடனும், சாமுண்டா என்ற பைரவரின் சக்தி எம வாகனத்தில் கத்தியுடனும், நரசிம்ஹி என்ற நரசிம்மரின் சக்தி கூரிய நகத்தை ஆயுதமாகவும் கொண்டு கமல பீடத்தில் தோன்றினர்.
இவர்கள் காளிகா என்ற சண்டிகா தேவியுடன் ஒன்பது ராத்திரிகளாயினர். இந்த நவராத்திரி தேவியர் சும்ப-நிசும்பர்களை ஒழித்தனர். அசுரர்களின் கொடுமையில் இருந்து விடுபட்ட தேவர்கள் கவுசிகி அம்பிகையையும், நவராத்திரி தேவதைகளையும் போற்றித் துதித்தனர்.
நவராத்திரி இரண்டாம் நாளான துவிதியை திதியில் மகிஷாசுரனை வதம் செய்யப் புறப்படும் ராஜ ராஜேஸ்வரி வடிவத்தை வணங்க வேண்டும். 3 வயது சிறுமியை கவுமாரி வடிவத்தில் நவக்கிரக நாயகியாக நினைத்து பூஜிக்க வேண்டும். முன்னதாக அரிசி மாவால் கோலமிட்டு கல்யாணி, பெஹாக் ராகங்களில் பாடல்கள் பாடி, முல்லை, துளசி, மஞ்சள் நிற கொன்றை, சாமந்தி, நீல சம்பங்கி பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
புளியோதரை, எள் பாயாசம், தயிர்வடை, வேர்க்கடலை சுண்டல், எள் சாதம் ஆகியவற்றில் முடிந்ததை நைவேத்தியம் செய்ய வேண்டும். இரண்டாம் நாள் நவராத்திரி பூஜையால் நோய்கள் நீங்கி, உடல் ஆரோக்கியம் பெருகும்.