தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி வேடமணிந்தனர்.
இதையொட்டி, நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் வீதியுலாவாக கொண்டு வரப்பட்டு, கோயில் முன்புறமுள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. கோயில் வளாகத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு அணிந்தனர். விழா நாட்களில் இவர்கள் பல்வேறு வேடமணிந்து அம்மனுக்கு காணிக்கை வசூலிப்பார்கள்.
நேற்று இரவு 10 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில், துர்க்கைஅலங்காரத்தில் முக்கிய வீதிகளில் பவனி வந்தார். விழா நாட்களில் சிறப்பு பூஜைகள், அம்மன் வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. வரும் 12-ம் தேதி நள்ளிரவு12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் முன்பாக எழுந்தருளிமகிஷாசுரனை வதம் செய்வார்.
வரும் 13-ம் தேதி பூஞ்சப்பரத்தில் அம்மன் வீதியுலா புறப்படுவார். மாலையில் அம்மன் கோயிலை வந்தவுடன் கொடி இறக்கப்படும். பக்தர்கள் காப்பு அவிழ்த்து, விரதத்தை நிறைவு செய்வார்கள்.