ஆன்மிகம்

வேண்டும் வரம் அருளும் நவராத்திரி வழிபாடு 1: மகேஸ்வரி திருக்கோலம்

செய்திப்பிரிவு

படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழி பலுக்கும் மூலமாக இருப்பவள் தேவியே 16 செல்வங்களை அருளும் பராசக்தியே மும்மூர்த்திகளும் வணங்கும் பரம்பொருளாக உள்ளாள். தாயாக இருந்து உலகைக் காக்கும் அம்பிகைக்கு 9 நாட்கள் விழா எடுக்கப்படுகிறது.

நவராத்திரி பண்டிகையின் முக்கிய நோக்கம், நாம் அனைவரும் மர்த்தினியாக அவதாரம் எடுத்து, மகிஷன் போன்ற தீய எண்ணங்களை அழிப்பதே ஆகும். ஆதிபரா சக்திக்கு ஆயிரம் வடிவங்களும் பெயர்களும் உள்ளன. அவற்றில் முதன்மை வடிவங்களாக துர்கை, லட்சுமி, சரஸ்வதியை நினைத்து நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

துர்கையை வழிபட்டால் தீய எண்ணங்கள் அழிந்து மன உறுதி கிடைக்கும். வட்சுமிதேவியை வழிபட்டால் பொன், பொருள், உயர்ந்த பண்பாடுகள், நற்சிந்தனைகள் கிடைக்கும். சரஸ்வதி தேவியை வழிபட்டால் ஞானம், உயர்ந்த கல்வி, கலைகளில் தேர்ச்சி கிடைக்கும். மனிதனுக்குரிய குணங்களான சத்வம் (மென்மை - மகாலட்சுமி), ரஜோ (வன்மை - சரஸ்வதி), தமோ (மந்தம் - துர்கை) ஆகிய அடிப்படையில் தேவியர் அமைந்துள்ளனர். அனைத்து குணங்களும் ஏதாவது ஒரு சமயத்தில் மனிதனுக்கு உதவுவதால் நாம் மூன்று தேவியரையும் வழிபடுகிறோம்.

நவராத்திரி முதல்நாளான பிரதமை திதியில், மது, கைடபர்களை அழித்த மகேஸ்வரி வடிவத்தை வணங்க வேண்டும். 2 வயது சிறுமியை குமாரி அவதாரத்தில் நவராத்திரி நாயகியாக நினைத்து பூஜிக்க வேண்டும் முன்னதாக அரிசி மாவால் பொட்டுக் கோலமிட வேண்டும். தோடி, நாதநாமக்ரியா ராகங்களில் பாடல்கள் பாடி, மல்லிகை, சிவப்பு நிற அரளி, வில்வம் ஆகியவற்றால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

வெண்பொங்கல், சுண்டல், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரைப் பொங்கல், மொச்சை, பருப்பு வடை ஆகியவற்றில் எது முடியுமோ அதை நைவேத்தியம் செய்ய வேண்டும். முதல் நாள் நவராத்திரி பூஜையால் வறுமை நீங்கும். வாழ்நாள் பெருகும்.

SCROLL FOR NEXT