ஆன்மிகம்

இஸ்லாம் நோன்புக் கட்டுரை: அழகிய கடன்

இக்வான் அமீர்

ல நூறு நன்மைகள் பூத்துக் குலுங்கும் ரமலான் மாதத்தில், தான, தர்மங்கள் போன்ற அறச்செயல்களைச் செய்வதற்கான சில சிறப்பு வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளன. இறையன்பையும், இறைதிருப்தியையும் பெறுவது ஒன்றே இறைவழிபாடுகளின் நோக்கம். அதனால், தேவையுள்ளோரை நன்றிக்கடன் பட்டராக ஆக்கும் முயற்சியோ அல்லது விளம்பரத்துக்கானதாகவோ இருத்தல் கூடாது என்பது முக்கிய நிபந்தனை.

தேவையுள்ளோர்க்கு செய்யப்படும் தர்மங்களைச் சொல்லிக் காட்டுவதும் கூடாது. அடுத்தவருக்குக் காட்டுவதற்கு செய்யப்படுவதும் தவறு . பாறை மீது படிந்திருக்கும் மண், பெருமழையால் கரைந்து அடித்துச் செல்லப்பட்டு விடுவதைப் போல அந்த நற்செயல்களும் வீணாகிவிடும் என்றும் எச்சரிக்கிறது. கனிவும், மன்னிப்பும், மனம் புண்படாத நடத்தையும் தான, தர்மங்களைவிட சிறந்தது என்றும் அறிவுறுத்துகிறது. இப்படி அறச்செயல்களுக்காக பயன்படுத்தும் பொருள் மிகச் சிறந்தவையாக இருப்பது முக்கியமானது. தரம் குறைந்த உணவு வகைகளும், மலிவான ஆடைகளும் அதேபோன்ற விளைவுகளைத்தான் இறைவனிடம் பெற்றுத் தரும்.

தான, தர்மங்களை வெளிப்படையாகச் செய்வது அனுமதிக்கப்பட்டாலும், மறைவாக செய்வது மிகவும் சிறப்புடையது. இதன் மூலம் இறைவன் கொடையாளியின் தீமைகளை அழித்துவிடுகிறான்.

தீயப் பழக்கவழக்கங்களில் சிக்கிக் கொள்ளும் நிலையில் உள்ளவர்களுக்கு அவர்களின் தேவைக்கு அதிகமாக கொடுக்கக் கூடாது. அதேபோல, ஏழை, எளியோர் தேவைகளுக்காக கொடுக்கப்படும் கடன் தொகையை தொல்லைக் கொடுத்து திரும்பப் பெறுவது அறவே கூடாது. கடனாளி, கடனைத் திரும்ப செலுத்தும் வசதி பெறும்வரை காத்திருக்கலாம் அல்லது அந்தக் கடனைப் பெறுவதற்கு எளிய தவணைகளைக் கொடுக்கலாம். உண்மையிலேயே கடனாளி அதை திரும்ப செலுத்த முடியாத நிலையில் இருக்கும்போது, அந்தக் கடனை மன்னித்துவிடுவது அதனினும் சிறப்பானது என்ற வழிகாட்டுதலும் அளிக்கப்படுகிறது.

அடுத்த முக்கியமான வரையறை, தான, தர்மங்களில் வரம்பு மீறாமல் இருப்பது; தம்மையும், தமது குடும்பத்தாரையும் வருத்திக்கொண்டு அறச்செயல்களில் ஈடுபடுவதை இறைவன் விரும்புவதில்லை. தனது தேவைகளுக்குப் போக மீதியுள்ளதை அறச்செயல்களுக்குப் பயன்படுத்துவதே யதார்த்தமானது.

இறையடியார்கள் அறச்செயல்கள் செய்யும்போது, வீண் விரயமும் கஞ்சத்தனமும் செய்வதில்லை. மாறாக அச்செலவுகள் மிதமான நிலையில் இருக்க வேண்டும். இதை திருக்குர்ஆன், “உமது கைகளைக் கழுத்தோடு சேர்த்துக் கட்டிவிடாதீர். முற்றிலும் அதனை விரித்தும் விடாதீர்!” – என்று எச்சரிக்கிறது. கடைசியாக அறச்செயல்களுக்கு தகுதியானவர் யார் என்ற பட்டியலையும் தருகிறது.

இதன் மூலமாக முதல் நிலையாக, மக்களின் கடமையாக திருக்குர்ஆன் கீழே கண்ட சில பண்புகளைப் பட்டியலிடுகிறது.

தாய், தந்தையரிடம் அன்புடன் நடந்துகொள்வது

உறவினர்கள், அநாதைகள், வறியவர்கள் ஆகியோருக்குக் கருணைக் காட்டுவது,

உறவினரான அண்டை வீட்டார், அந்நியரான அண்டை வீட்டார், பக்கத்திலிருக்கும் நண்பர் மற்றும் வழிப்போக்கர்கள், பணியாட்கள் ஆகியோருடனும் நயமாக நடந்துகொள்வது

தங்கள் வறுமை நிலையை வெளிப்படுத்திக் கொள்ளாமல் ஓடியாடி உழைக்க முடியாத நிலையில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவது.

இறைவனின் திருப்தியைப் பெறும் பொருட்டு இறைவழியில் செய்யப்படும் செலவை இறைவனுக்காகத் தரப்படும் அழகிய கடன் என்று வர்ணிக்கிறது திருக்குர்ஆன். நன்மைப் புரியும் ஆர்வத்துடன், தன்னலம் பாராமல் இறைவனுக்காக செலவழிக்கப்படும் பொருள் இது. இத்தகைய பொருளை இறைவன் தனது பொறுப்பில் கடனாக ஆக்கிக்கொள்கிறான். அசலோடு சேர்த்து பன்மடங்கு பெருக்கித் தருவதாக வாக்களிக்கிறான்.

“நான் மூன்று நபர்களைக் குறித்து உறுதிமொழி தருகிறேன். எந்த மனிதனின் செல்வமும் தர்மம் செய்வதால் குறைந்துவிடாது. எவர், அடக்குமுறைகளின் போது பொறுமையைக் கையாளுகிறாரோ இறைவன் அவரைக் கண்ணியப்படுத்துவான். எவர் யாசகத்தின் கதவுகளைத் திறக்கிறாரோ இறைவன் அவருக்கு வறுமை, தேவைகள் ஆகியவற்றின் கதவுகளைத் திறந்துவிடுகிறான்”

SCROLL FOR NEXT