ஆன்மிகம்

சந்திரன், மனம் மற்றும் கணபதியை இணைப்பது எது? - விநாயகர் சதுர்த்தியின் சாரம்

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர் 

விநாயகர் சதுர்த்தியின் இரவு நாம் சந்திரனை பார்க்கக் கூடாது என்றும், அவ்வாறு பார்த்து விட்டால், நாம் செய்யாத செயலுக்கு பழி ஏற்க நேரிடும் எனவும் நம்பப்படுகிறது! இதை கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், இதற்கு ஓர் ஆழமான பொருள் இருக்கிறது. சந்திரன் மனதை குறிக்கிறது. சந்திரன் எவ்வாறு தேய்ந்து வளர்கிறதோ, அவ்வாறே மனதும் மேலும் கீழும் செல்கிறது. சில நாட்கள் அது உங்களை சிறப்பாக உணர செய்கிறது, அதுபோல் சில நேரங்களில் மிக சிறிய காரணங்களுக்காக உங்களை அவநம்பிக்கை எனும் குழிக்குள் இழுத்து விட்டு விடுகிறது.

மனம் மட்டுமே உங்களை தொடர்ந்து பிரச்சினைகளுக்கு உள்ளாக்குகிறது. விநாயகர் ஞானத்தின் கடவுள், அவர் தான் நமக்கு நம் மனதின் அலைச்சல்களில் இருந்து எவ்வாறு வெளிவருவது, எவ்வாறு ஞானத்தில் நிலைத்து நிற்பது, என கற்று தருகிறார். மேலும் நம் இருப்பின் பேரானந்தத்தில் இருந்து, ஏதன் மூலமும், நாம் தடுமாற்றம் கொண்டு வெளிவராமல் பார்த்து கொள்கிறார்.

அதனால்தான், விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் இரவு, நாம் சந்திரனை பார்ப்பதில்லை. அதற்கான அர்த்தம், நாம் ஞானத்தை பின்பற்றி, நம் சிறிய மனம், நம்மை ஆட்கொள்ளாமல் பார்த்து கொள்கிறோம் என்பது தான். அதனால், கணபதியை சத்சங்கத்தில், அதாவது ஞானத்தின் உணர்வில், சத்தியத்தின் தோழமையுடன், மேலும் இயற்கைக்கான பயபக்தியுடன் கொண்டாடுங்கள்.

நம்மை பற்றிய விழிப்புணர்வில் தான் ஞானம் மலர்கிறது. எங்கு செயலற்ற தண்மை இருக்கிறதோ, அங்கு ஞானமோ, அறிவோ, உயிர்ப்போ (சைதன்யம்) அல்லது வாழ்வின் முன்னேற்றமோ கூட இருப்பதில்லை, எனவே நம்முள் இருக்கும் உள்ளுணர்வை நாம் விழிப்படைய செய்ய வேண்டும். நம் உள்ளுணர்வை தலைமை தாங்கும் தெய்வமாக விநாயகர் இருக்கிறார். அதனால்தான் எந்த ஒரு பூஜைக்கு முன்னும், விழிப்புணர்வை தூண்டும் விநாயகர் கடவுளை துதிக்கிறோம்.

பக்தர்கள், விநாயகர் சிலைகளை, வீட்டுக்கு கொண்டு வந்து பூஜைக்கு ஏற்றபடி புனிதப்படுத்துகிறார்கள். பின்னர், பத்து நாட்களான பூஜை காலத்தில் , நம் உள்ளுணர்வில் இருக்கும் விநாயகரை, வெளிவந்து அந்த சிலைகளில் ஸ்தாபிதம் கொள்ள - அதாவது, உருவாக்க படாததில் இருந்து உருவாக்க பட்டத்திற்கு வருமாறு வேண்டி கொள்கிறோம். ஏனெனில் அப்போது தான் நம்மால் அவருடன் சிறிது விளையாட முடியும்.

என்னது இந்த “விளையாட்டு?” நமக்குள் என்னவெல்லாம் இருக்கிறதோ அது விநாயகரால் நமக்கு அருளப்பட்டது. நம்மால் அவருக்கு எதையும் கொடுக்க முடியாது ஏனெனில், முதலில் எதுவும் நம்முடையது இல்லை, மாறாக அனைத்தும் அவருடையதே!!. இருந்தாலும், பூஜையின் போது , அவர் நமக்கு அருளிய, பூக்கள், தூபம், விளக்கின் ரூபத்தில் இருக்கும் ஒளி, மற்றும் சுவையான உணவுகள் போன்றவற்றை அவருக்கே படைப்பது போல் நடிக்கிறோம். அது தான் அந்த விளையாட்டு.

அந்த பத்து நாள் பூஜைக்கு பிறகு, அவர் எங்கிருந்து வந்தாரோ; அதாவது நாம் உள்ளுணர்வில் இருந்து, அங்கேயே திரும்ப போகும்படி வேண்டி கொள்கிறோம் பிறகு தான் விநாயகர் சிலைகளை நீரில் விடும் (விஷர்ஜான் ) சடங்குகள் தொடங்குகின்றன. இது விநாயகர், சிலை உருவம் இல்லை, அவர் நம்முள் இருப்பவர் என்பதை வலுப்படுத்துகிறது. எங்கும் நிறைந்தவரை உருவமாகவும், மேலும் அந்த உருவ சிலை மூலம் மகிழ்ச்சியை பெற்றிருந்தாலும், விநாயகர் எப்பொழுதும் நம்முள்ளே இருப்பவர் மட்டுமே என்னும் விழிப்புணர்வை அனுபவ படுவதே விநாயகர் சதுர்த்தியின் சாரமாகும்.

ஆனால், விநாயகர் பூஜையின் போது, நம்முடைய சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். செயற்கை / நச்சுத்தன்மை வாய்ந்த பொருள்கள் அல்லது பெயின்ட் கொண்ட உருவ சிலைகளை பயன்படுத்த கூடாது. இவை மக்கும் தன்மை கொண்டவைகள் அல்ல, அதனால் சுற்றுசூழலுக்கு உகந்தவையல்ல. இயற்கை களிமண்ணோடு, இயற்கை வண்ணங்களை கொண்டு சிலைகளை செய்வதே மிகவும் நல்லது.

நீங்கள் யானையை பார்த்தீர்கள் என்றால் அதற்கு ஒரே ஒரு நிறம் மட்டுமே, அதனால் நாம் வணங்குவதற்கு உபயோகிக்கும் விநாயகர் சிலையிலும் கூடுதல் வண்ணங்கள் இருக்க வேண்டியதில்லை. மூழ்க வைப்பதற்காக நாம் சிறிய அளவிலான, பெயின்ட்கள் இடாத சிலைகளை பயன்படுத்தலாம். விழாவின்போது, பஞ்ச தத்வா- (ஐந்து தத்துவங்களை ) ஆகாயம், காற்று, நீர், நெருப்பு மற்றும் நிலம் இவைகள் மாசுபடுதலில் இருந்து காப்பாற்றுவது மிக முக்கியம். நாம் அனைவரும், பூஜை செய்யும் போது விநாயகரை நம் இதயத்தில் வைத்து பூஜித்து, நம்முடைய சுற்றுச் சூழலுக்கு எந்த வித பாதிப்பும் வராமல் கவனம் கொள்வோம். - குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

SCROLL FOR NEXT