நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைபேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று (ஆக. 29) மாலை தொடங்குகிறது.
தஞ்சாவூர் மறை மாவட்ட ஆயர் சகாயராஜ், கொடியை புனிதம் செய்து, கொடியேற்றி, பெருவிழாவைத் தொடங்கிவைக்கிறார். கொடியேற்றத்தைக்காண சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கடலூர் உள்ளிட்டமாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலமாகவும் லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வந்துள்ளனர். மேலும், மகாராஷ்டிரா, கோவா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் வேளாங்கண்ணிக்கு வந்துள்ளனர்.
ஏராளமான பக்தர்கள் மொட்டை அடித்து கடலில் நீராடிவிட்டு, வேளாங்கண்ணி பேராலயத்தில் மெழுகுவத்தி ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாங்கண்ணி முழுவதும் ஏற்கெனவே லட்சக்கணக்கான மக்கள் குவிந்துள்ள நிலையில், தொடர்ந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்துக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான தங்குமிடம், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து வேளாங்கண்ணி பேரூராட்சி மற்றும் பேராலய நிர்வாகம் செய்துள்ளன. மேலும், பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.