ஆன்மிகம்

பக்தர்கள் வசதிக்காக பழநியில் கூடுதலாக முடி காணிக்கை மண்டபம் திறப்பு

ஆ.நல்லசிவன்

பழநி: பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் வசதிக்காக சுற்றுலா பேருந்து நிலையத்தில் கூடுதலாக முடி காணிக்கை மண்டபம் இன்று (ஆக.14) காலை திறக்கப்பட்டது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தினமும் பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் தங்களின் தலை முடியை காணிக்கையாக செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். திருவிழா காலங்களில் தினமும் சராசரியாக 20 ஆயிரம் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துகின்றனர். இதற்காக, பழநி தேவஸ்தானம் சார்பில் திருஆவினன்குடி கோயில் அருகில், சண்முக நதி, வின்ச் நிலையம் அருகில், தண்டபாணி நிலைய வளாகம் உட்பட 7 இடங்களில் முடி காணிக்கை செலுத்தும் இடங்கள் உள்ளன.

இங்கு 300-க்கும் மேற்பட்டோர் முடி இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பக்தர்களின் வசதிக்காக கூடுதலாக சுற்றுலா பேருந்து நிலையத்தில் முடி காணிக்கை செலுத்தும் மையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, இன்று காலை சுற்றுலா பேருந்து நிலையத்தில் உள்ள குறிஞ்சி விடுதி வளாகத்தில் புதிதாக முடி காணிக்கை மண்டபம் திறக்கப்பட்டது.

கோயில் இணை ஆணையர் மாரிமுத்து இந்த மண்டபத்தைத் திறந்து வைத்தார். துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லட்சுமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இம்மையத்திலும் பக்தர்கள் இலவசமாக முடி காணிக்கை செலுத்தலாம் என அதிகாரிகள் கூறினர்.

SCROLL FOR NEXT