ஆன்மிகம்

குன்னூர் தந்தி மாரியம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டம் குன்னூரில் அமைந்துள்ளது தந்தி மாரியம்மன் கோயில். குளிர்ந்த அடர்ந்த காட்டுப் பகுதியை அங்கிலேயர்கள் திருத்திய போது, சிறிய ஊராக இது இருந்தது. எனவே இதை ‘குன்னூர்' என அழைத்தனர். ‘குன்னூர்' என்றால் ‘சிறிய ஊர்’ என பொருள்படும்.

இங்கு அம்பாளுக்கு கோயில் கட்டியபோது, அதன் அருகில் ஆங்கிலேயர்கள் ‘தந்திக்கம்பம்’ ஒன்றை இவ்விடத்தில் நட்டனர். இதனால், இங்கிருக்கும் அம்பாள் ஆதியில் ‘தந்தி மாரியம்மன்’ என்ற திருப்பெயரில் அழைக்கப்பட்டு பிற்காலத்தில் அப்பெயரே நிலைத்து விட்டது. ஆரம்பத்தில் வைக்கப்பட்ட தந்திக் கம்பம், இன்று வரையிலும் கோயிலுக்கு அருகே உள்ளது.

இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்மனுக்கு பூஜை நடக்கும் போது, தந்திக் கம்பத்திற்கும் கற்பூர தீபாராதனை நடத்தப்படுகிறது. குன்னூரில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் போது, தந்தி மாரியம்மனை மனமுருகி வணங்கிட மழை பெய்யும் என்று நம்பிக்கை பக்தர்களிடத்தில் உண்டு. சித்திரையில் ஆண்டுத் திருவிழா, ஆடி வெள்ளி, நவராத்திரி, தீபாவளி, திருக்கார்த்திகை, தைப்பொங்கல், மாத அமாவாசை, பவுர்ணமி திருவிழாக்கள் இங்கு நடக்கின்றன.

திருமணத்தடை, புத்திர தோஷம் நீங்க, தொழில் விருத்தியடைய, செல்வம் பெருக, காலம் தவறாமல் மழை பெய்ய, கல்வியில் மேன்மை பெற, பதவி உயர்வு கிட்ட இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். அம்பாளுக்கு அவல், தேங்காய்ப்பூ, சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் செய்து, புடவை சாத்தி, பூக்குண்டம் இறங்கி, பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து, தந்தி கம்பத்துக்கு தண்ணீர் ஊற்றி, அன்ன தானம் செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.

SCROLL FOR NEXT