ஆன்மிகம்

கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

செய்திப்பிரிவு

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில், ‘குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை’ என்ற மிகவும் வித்தியாசமான சடங்கு நடைபெறுகிறது. இதுபோன்ற நேர்த்திக்கடனை வேறு எந்த கோயிலிலும் காண முடியாது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள எல்லையில் கொல்லங்கோட்டில் குடிகொண்டுள்ள பத்ரகாளி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். குழந்தை இல்லாத தம்பதியினர் இக்கோயிலில் ‘தூக்க நேர்ச்சை’ நடத்திக் கொடுப்பதாக வேண்டிக் கொள்கிறார்கள். பின்னர் குழந்தைகள் பிறந்ததும் தூக்க நேர்ச்சையை நிறைவேற்றுகின்றனர். ஆண்டுதோறும் மாசி மாதம் 10 நாட்கள் இக்கோயிலில் மீன பரணி திருவிழா நடைபெறுகிறது. இதன் 9-வது நாளில் ‘தூக்க நேர்ச்சை’ நடைபெறும். இதில் தமிழக, கேரள பக்தர்கள் குவிகிறார்கள்.

மரத்தாலான ஒரு வண்டியில், சுமார் 20 அடி உயரமுள்ள இரு மரத்தடிகள் பொருத்தப்பட்டிருக்கும். கிணற்றில் நீர் இரைக்க பயன்படும் ஏற்றம் போன்று, இந்த மரத்தடிகளை 20 அடி உயரத்துக்கு மேலே ஏற்றவும், கீழே இறக்கவும் முடியும். இந்த மரத்தடிகளின் உச்சியில் உள்ள மரச்சட்டங்களில் நான்கு பேர் தொங்கிக் கொண்டு, தலா ஒரு குழந்தையை கையில் வைத்துக் கொள்வார்கள்.

பின்னர் கோயிலைச் சுற்றி இந்த வண்டியைத் தேர் போல இழுத்து வருவார்கள். அதன் பின்னர் அடுத்த நான்கு குழந்தைகளுடன், வேறு நான்கு பேர் இந்த மரத்தடியில் தொங்கிக் கொள்ள, வண்டி இழுத்து வரப்படும். இப்படியே, 2,000 பேர் வரை, 2,000 குழந்தைகளுடன் தூக்க நேர்ச்சையில் பங்கேற்பர். 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளே தூக்க நேர்ச்சையில் பங்கேற்கின்றனர். அவசியம் காண வேண்டிய விழா இது.

SCROLL FOR NEXT