சென்னை: சென்னை அக்கரை இஸ்கான் கோயிலில் ஆகஸ்ட் 16 முதல் 19-ம்தேதி வரை ‘ஜூலன் யாத்திரை’ நடைபெற உள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அக்கரை பகுதியில் அமைந்துள்ள ‘இஸ்கான்’ கோயிலில் ராதா மற்றும் கிருஷ்ணரின் அன்பு பரிமாற்றத்தை குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் ‘ஜூலன் யாத்திரை' கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டின் ‘ஜூலன் யாத்திரை' ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 19-ம் தேதி பலராமர் அவதார தினமும் கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி, ராதா - கிருஷ்ணரின் விக்கிரகங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, ஊஞ்சலில் வைக்கப்படும். தொடர்ந்து, பக்தி பாடல்கள், பஜனை நிகழ்ச்சிகள், சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி, பகவத்கீதை சொற்பொழிவு ஆகியவை நடைபெறும்.
ஆரத்தி நிகழ்ச்சிக்கு பிறகு, சுவாமி விக்கிரகங்கள் வைக்கப்பட்டுள்ள ஊஞ்சலை ஆட்டி பக்தர்கள் பிரார்த்தனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும் என்று இஸ்கான் தெரிவித்துள்ளது.