திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே மத்தூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கிறார் மகிஷாசுரமர்த்தினி அம்மன். இக்கோயில், 64 சக்தி பீடங்களுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுகிறது.
மத்தூர் எல்லையில் 1954-ம் ஆண்டு அரக்கோணம் - ரேணிகுண்டா இரண்டாவது இருப்புப் பாதை அமைக்கும் பணி நடைபெற்ற போது, சக்திமேடு என்ற இடத்தில் பணியாளர்கள் கடப்பாறையால் மண்ணைத் தோண்ட, ஒரு இடத்தில், ’டங்க்’ என்று வெங்கல சப்தம் கேட்டது. அந்த பணியாளர் தெய்வ அருளால் மயக்கமடைந்தார்.
இதையடுத்து, அங்கு கூடிய சக பணியாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் மண்ணை அகற்றிய போது, மகிஷாசுரமர்த்தினி அம்மன் வெளிப்பட்டார். தொடர்ந்து, அம்மனை மத்தூரில் பிரதிஷ்டை செய்தனர்.
இந்த அம்மன் இங்கு, 8 கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு, கத்தி, கேடயம், திரிசூலம் மற்றும் கபால மாலை ஆகியவற்றை தரித்து, மகிஷா சூரனை தனது திரிசூலத்தால் குத்தி வென்றபடி, பக்தர்களுக்கு அருள்புரிந்து புரிந்து வருகிறார். 7 அடிக்கும் மேல் நெடிந்துயர்ந்து உள்ள அம்மன் தீர்க்கத்துடன், மகிஷா சூரனின் தலையின் மேல் ஆனந்த நடனம் புரிகிறார்.
இக்கோயிலில் அமாவாசை, பவுர்ணமி தோறும் நடைபெறும் 108 பால்குட அபிஷேகம் விசேஷமானது. 108 சங்காபிஷேகங்களில் திரளான பக்தர்கள் பங்குபெற்று, அம்மனின் அருளை பெற்று வருகின்றனர். அம்மனை வேண்டி ஆடி சிறப்பு வழிபாடுகளும் நடந்து வருகின்றன.