திருவாரூர்: குரு பரிகாரத் தலமான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வர் கோயில், குரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. இக்கோயிலில்கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக 2021 ஆகஸ்ட் மாதம் கோயிலில் பாலாலயம் செய்யப்பட்டு, ரூ.2 கோடி செலவில் திருப்பணிகள் தொடங்கின.
இந்தப் பணிகள் அண்மையில் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 7-ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. 6 கால யாகசாலை பூஜைகளுக்குப் பின் நேற்று அதிகாலை யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்றது.
தொடர்ந்து, கலங்காமற் காத்த கணபதி, ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலி, குரு பகவான் சந்நிதி விமானங்கள், ராஜகோபுரங்கள் ஆகியவற்றுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது.
விழாவில் நாகை எம்.பி. செல்வராஜ் மற்றும் முக்கியப் பிரமுகர்கள், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில், ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் ராமு, செயல் அலுவலர் சூரிய நாராயணன், கண்காணிப்பாளர் அரவிந்தன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.