ஆன்மிகம்

ஜோதிடம் அறிவோம் 43 இதுதான்... இப்படித்தான்! ஏழாம் பொருத்தம் தெரியுமா?

ஜெயம் சரவணன்

ஏழாம் பொருத்தம், ஏழாம் பொருத்தம் என்று அடிக்கடி யாராவது சொல்லக் கேட்டிருப்பீர்கள்.

அதாவது, கணவன் மனைவிக்குள் அடிக்கடி ஏற்படும் சண்டை சச்சரவுகள், நண்பர்களுக்குள் ஏற்படும் வாக்குவாதங்கள் என எங்கெல்லாம் பிரச்சனைகள் உண்டாகிறதோ, அங்கெல்லாம் இந்த வார்த்தையைக் கேட்டிருக்கலாம்.

அது என்ன “ஏழாம் பொருத்தம்?”

அதாவது ஒருவரின் குணத்திற்கு நேரெதிரான குணாதிசயம் உடையவர்கள் இந்த ஏழாம் பொருத்தத்திற்கு சரியான உதாரணம்.

இதில் நட்பு விஷயத்தில் சொல்வதைவிட, தம்பதிகளுக்கு பார்க்கப்படுவதே அதிகம்.

சரி, இந்த ஏழாம் பொருத்தம் யார்யாருக்கெல்லாம் இருக்கும்? அல்லது ஏற்படும்?

ஆச்சர்யமான உண்மை... நம்மில் அத்தனை பேருக்கும் இந்த பொருத்தம் உண்டு!

அதாவது, மணமானவர்கள் அனைவருமே ஏழாம் பொருத்தக்காரர்களே!

எப்படி?

ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன் அல்லது மனைவி சற்று வெள்ளந்தியாக, அப்பிராணியாக இருந்தால் அவரின் கணவர் அல்லது மனைவி எச்சரிக்கை உணர்வுள்ளவராகவும் சாதுர்யமானவராகவும், புத்திசாலியாகவும் இருப்பதைப் பார்க்கலாம்.

உதாரணமாக கணவர் யாரையும் நம்பும் மனிதராக இருப்பவராக இருந்தால், அவரின் மனைவி ஒருவரைப் பார்த்தவுடன் “எடை” போட்டுவிடுவார், அவர் நல்லவரா கெட்டவரா என்று!

இதுதான் ஏழாம் பொருத்தம்!

இப்போது ஜாதக ரீதியாகப் பார்ப்போம்..!

ஜாதகத்தில் ஒவ்வொரு கட்டமும் ஒவ்வொரு குணாதிசயத்தைக் காட்டும். அதுமட்டுமல்ல... ஒவ்வொரு கட்டத்திற்கும் அதன் ஏழாமிடம் எதிர் குணாதியசத்தைக் காட்டும்.

உதாரணமாக சூரியன் மேஷ ராசியில் உச்சம். அதற்கு நேரெதிர் ஏழாமிடமான துலாராசியில் நீசம்.

(உச்சம்=இருமடங்கு பலம். நீசம்= முற்றிலும் பலம் இழத்தல்)

குரு பகவான் கடக ராசியில் உச்சம்.

அதற்கு நேரெதிர் ஏழாம்ராசியான மகரத்தில் நீசம்.

இப்படி ஒவ்வொரு ராசிக்கட்டமும் தன் வீட்டிற்கு ஏழாம் இடம் எதிர்வினை செய்யும். அதாவது எதிரெதிரான செயல்களைச் செய்யும்.

ஒரு வீடு நன்மை என்றால் ஏழாமிடம் தீமை.

ஒருவீடு மந்தபுத்தி என்றால் ஏழாமிடம் புத்திசாலி.

வீரம் என்றால் எதிர்வீடு கோழை.

இப்படிப் பலன்கள் எதிரெதிராகவே இருக்கும்.

ஆக, கணவன் மனைவி ராசி, ஏழுக்கு ஏழாக இல்லாவிட்டாலும் (உதாரணமாக பக்கத்து ராசியாக இருந்தாலும்) ஆண்பால் பெண்பால் என்னும் எதிரெதிர் பால் , எதிரெதிர் ராசி போல் கருத வேண்டும்.

ஆக இப்படி ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு குணாதிசயமாக சகோதர சகோதரிகளும் இருப்பதைப் பார்க்கலாம்.

ஆனால் இந்த ஏழாம் பொருத்தம் என்பதை, நாம் கணவன் மனைவிக்கு மட்டுமே பார்த்துப் பழகியதால் நம் குடும்பத்தில் இருப்பவர்களோடு நாம் பொருத்தி பார்க்காமலேயே இருந்து விட்டோம்.

இது நண்பர்களுக்கும் மிக முக்கியமாக “கூட்டுத்தொழில்” செய்பவர்களுக்கும் பார்க்கப்பட வேண்டிய ஒன்று என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஏனென்றால் கூட்டுத்தொழிலில் ஒருவர் சற்று இரக்ககுணம் உடையவராக இருக்க மற்றொருவர் இரக்கமே இல்லாதவராக இருப்பதே கூட்டுத்தொழிலுக்கு நல்லது.

நான் கூறுவது மேலெழுந்தவாரியாக படிக்கும் போது சரியில்லாதது போல தோன்றினாலும் இதுதான் நிதர்சனமான உண்மை என்பதை நிதானமாக யோசித்தால் புரியவரும்.

ஒரு முதலாளி இரக்கமானவராகவும், மற்றவர் கடுமையான குணம் உள்ளவராகவும் இருக்கும் தொழில் நிறுவனம் என்றைக்கும் நிலைத்திருக்கும்.

இது என் அனுபவத்தில் பார்த்தது.

சரி கணவன் மனைவிக்கு வருவோம்.

இப்படி ஏழாம் பொருத்தமாக (கன கச்சிதமாக) இருக்கும் தம்பதி, நல்ல செல்வவளத்துடன், சௌகரியமான வாழ்வு, நீண்ட ஆயுளோடு இருப்பதைப் பார்க்கலாம்.

இங்கு ஒரு விஷயத்தை நான் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

கணவன் மனைவி இருவரும் திருமணம் செய்த ஓரிரு மாதங்களிலேயே ஒருவரின் பலம் பலவீனம் அறிந்து கொண்டால் இருவருக்குமான வாழ்க்கைத் தராசு, தானாகவே சமனாகிவிடும்.

இந்த இடத்தில்தான் முக்கியமான விஷயம் உள்ளது. ஒருவரின் பலவீனத்தை அறிந்ததும்(கணவன் அல்லது மனைவியின்) அந்த பலவீனத்தையே பகடையாக பயன்படுத்தும் போது தான் ஈகோ வெளிப்பட ஆரம்பிக்கிறது.

இதை முழுநேரமும் ஆதிக்கமாக செயல்படுத்தும் போதுதான் பிரிவினை ஆரம்பிக்கிறது, அது முடிவில் நீதிமன்றத்தை நோக்கிப் போகிறது. அப்படியானால் என்ன செய்ய வேண்டும்?

ஒருசில வீடுகளில் பார்த்திருப்பீர்கள். மனைவியானவர் ஏதாவதொரு முக்கியமான விஷயத்தில் கணவர் ஈடுபாட்டோடு இருக்கும்போது “இந்தா பாருங்க உங்களுக்கு ஒன்னும் தெரியாது. நான் சொல்றத செய்யுங்கள்” என்பார்,

அவர் கூறும் முடிவும் சுபமாகவே இருக்கும். மிகச்சரியாகவே இருக்கும். இதை அந்தக் கணவரும் எந்தக் கேள்வியும் கேட்காமல் செய்வார். அந்தக் குடும்பம் எந்த விதத்திலும் தோற்றுப்போகாது.

இதுதான் ஏழாம் பொருத்தம்.இது நன்மை தரக்கூடியதே. நல்லவிதமாக பயன்படுத்தினால்... எல்லாம் நன்மையே!

அப்படியானால் சண்டை சச்சரவு?

அது வெளித் தோற்றத்திற்கு அப்படித் தெரியும். உண்மையில் இது இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் உள்ள நல்ல “அண்டர்ஸ்டாண்டிங்” என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

சரி ஒரு ரகசியம் சொல்கிறேன் பெண்களுக்கு!

தலையணை மந்திரம் என்கிறார்களே... அதை எப்படி செயல்படுத்துவது? அது உண்மையா?

உண்மைதான்! உங்கள் கணவரின் இடது காதில் சொல்லப்படும் எதுவும் மந்திரமாக மாறி நிறைவேறும். வலது காதில் சொல்லப்படும் எதுவும் நிராகரிக்கப்படும். செயல்படுத்திப் பாருங்கள்..

குரு மந்திரம் வலது காதில் வழங்கப்படவேண்டும்.

அது நிலைத்து பலன் வழங்கும் என்பதை அறிவீர்கள்தானே.

இதன் அடுத்த அத்தியாயம் வரும் 30.5.18 புதன்கிழமை அன்று வெளியாகும்.

ஜோதிடரைத் தொடர்பு கொள்ள: 98841 60779

தெளிவோம்

SCROLL FOR NEXT