திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டத்தின்போது இதுவரை இல்லாத வகையில் 5 முறை தேர் வடம் அறுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மாற்று ஏற்பாடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இருந்து வடம் கொண்டுவரப்பட்டது.
ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம்: இத்திருக்கோயிலில் நடைபெற்றுவரும் ஆனிப் பெருந்திருவிழாவின் 9-ம் நாளான இன்று காலை திருத்தேரோட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன், திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் ராபர்ட் புரூஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் காலை 7.18 மணிக்கு சுவாமி தேரின் வடம்பிடித்து இழுத்து தேர் திருவிழாவை தொடங்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்தபோது தேரில் கட்டப்பட்டிருந்த 3 ராட்சத வடம் அறுந்ததால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இரும்பு சங்கிலி இணைப்பு:இதனால் தேரை இழுப்பதில் தாமதம் ஏற்பட்டது. உடனடியாக மாற்று வடம் கொண்டுவரப்பட்டு தேரில் கட்டப்பட்டது. 40 நிமிடம் தாமதமாக தேரோட்டம் மீண்டும் தொடங்கிய நிலையில் மீண்டும் ஒரு சில வினாடிகளில் வடம் அறுந்தது. பின்னர் மீண்டும் மாற்று வடம் கட்டப்பட்டு தேர் இழுக்கப்பட்டு. 500 மீட்டர் தொலைவை தேர் கடந்த நிலையில் 3-வது முறையாக தேரின் வடம் அறுந்தது. இதையடுத்து இரும்பு சங்கிலி கொண்டுவரப்பட்டு தேரை இழுக்கும் முயற்சியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
5வது முறையாக வடம் அறுந்தது.... - இரும்பு சங்கிலி இரண்டு வடத்துக்கு நடுவில் கட்டப்பட்டது. பின்னர் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி தேரை இழுக்க தொடங்கினர். சிறிது தூரம் கடந்த நிலையில் 4-வது முறையாக வடம் அறுந்தது. மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு அரை மணி நேரம் தாமதத்துக்கு பிறகு தேர் இழுக்கப்பட்டு டவுன் வாகையடிமுக்கில் வந்தபோது மீண்டும் 5-வது முறையாக வடம் அறுந்தது.இவ்வாறு அடுத்தடுத்து 5 முறை திருத்தேர் வடம் அறுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
அதிருப்தி: தேர் இழுக்க தொடங்கிய சில வினாடிகளிலையே வடம் அறுந்ததை பக்தர்கள் சிலர் அபசகுனமாக கருதினர். இதுவரை 517 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெற்றிருந்தபோது நடைபெறாத நிலையில் இம்முறை வடம் அறுந்ததற்கு இந்து அறநிலைத்துறையின் அலட்சியமே காரணம் என்று கூறி இந்து முன்னணி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பக்தர்கள் மத்தியிலும் கோயில் நிர்வாகம் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டது.
இந்து சமய அறநிலையத் துறை அலட்சியம்: இதற்கிடையில் விநாயகர் தேரின் சக்கரத்தில் அடிக்கப்பட்டிருந்த இரும்பு தகடு பெயர்ந்து சக்கரம் உருக்குலைந்து காணப்பட்டதும் பக்தர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் தேர் திருவிழாவை சிறப்புற நடத்த பல்வேறு ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்திருந்த அதிகாரிகள் தேர் வடத்தின் உறுதித்தன்மை குறித்து அலட்சியமாக இருந்ததாக பக்தர்கள் குற்றஞ்சாட்டினர்.
திருச்செந்தூரில் இருந்து வந்த வடம்: மேலும், தேருக்கு பின்னால் தடி வைப்பதிலும் கடும் சிரமங்கள் ஏற்பட்டது. இருப்பினும் இளைஞர்கள் உற்சாகத்தோடு தொடர்ந்து தேரை நகர்த்தினர். வடம் அறுந்து விழுந்த காரணத்தால் இம்முறை நெல்லையப்பர் தேர் நிலையம் வந்தடைய மிகவும் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் மாற்று ஏற்பாடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து வடம் கொண்டு வரப்பட்டது. அந்த வடத்தை பயன்படுத்தி தேர் தொடர்ந்து இழுக்கப்பட்டது.