தேவகோட்டை: கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற தேரோட்டத்தில் அனைத்து சமூகத்தினரும் இணைந்து ஒற்றுமையாக வடம் பிடித்து இழுத்தனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவியில் சிவகங்கை தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது. தென்னிலை, உஞ்சனை, செம்பொன்மாரி, இறகுசேரி ஆகிய 4 பகுதிகளைச் (நாடு) சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இங்கு வழிபட்டு வருகின்றனர்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடைபெறும். இந்நிலையில் தேர்வடம் பிடித்து இழுப்பதில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் கடந்த 1998-ல் தேரோட்டம் நின்றது. பின்னர் பலத்த பாதுகாப்புடன் 2002 முதல் 2006 வரை தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து கும்பாபிஷேக திருப்பணிகளுக்காக மீண்டும் தேரோட்டம் நிறுத்தப்பட்டது.
கடந்த 2012-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற பின்னர், தேர் பழுதானதாகக் கூறி, தேரோட்டத்தை நடத்தவில்லை. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், புதிய தேர் செய்யப்பட்டது. ஆனால் தேர் வெள்ளோட்டம் நடத்தாமல் இருந்தது. மகா.சிதம்பரம் என்பவர் தொடர்ந்த வழக்கில் கடந்த 2020-ம் ஆண்டு தேர் வெள்ளோட்டம் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. ஆனால் கரோனாவால் வெள்ளோட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் நீதிமன்றம் உத்தரவுபடி பிப்.11-ம் தேதி தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. தேவஸ்தான ஊழியர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். இந்நிலையில் இக்கோயில் திருவிழா ஜூன் 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் தேரோட்டத்தில் அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையாக வடம் பிடித்து இழுப்பது என முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று தேரோட்டத்தை ஒட்டி காலை 6 மணிக்கு பிரியாவிடையுடன் சொர்ணமூர்த்தீஸ்வரர் பெரிய தேரிலும், பெரியநாயகி அம்பிகா சிறிய தேரிலும் எழுந்தருளினர். சப்ரத்தில் விநாயகர், முருகன், சண்டிகேஸ்வர் எழுந்தருளினர். காலை 6.35 மணிக்கு அனைத்து சமூகத்தினரும் வடம் பிடித்து தேர் இழுக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச் சந்திரன், கோட்டாட்சியர் பால்துரை, தேவதஸ்தான அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தென்மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் 3 டிஐஜிகள், 10 எஸ்பிகள், 12 கூடுதல் எஸ்பிகள், 25 டிஎஸ்பிகள், 80 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 3,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.