புதுக்கோட்டை மாவட்டம் குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயிலில் நேற்று நடைபெற்ற கும்பாபிஷேகத்தைக் காண திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள். 
ஆன்மிகம்

குளமங்கலம் அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் உள்ள புஷ்கலாம்பிகா உடனுறை பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயிலில் உள்ள 33 அடி உயர குதிரை சிலை, ஆசியாவிலேயே பெரியதாகும். இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசிமகத் திருவிழாவில் நேர்த்திக்கடனாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காகித மாலைகள் பக்தர்களால் குதிரை சிலைக்கு அணிவிக்கப்படுவது சிறப்பு.

இங்கு 2010-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

திருப்பணிகள் நிறைவடைந்த தும் கடந்த வாரம் கும்பாபிஷேக பூஜைகள், வேள்விகள் தொடங்கின. நேற்று காலை யாகசாலை பூஜைகள் நிறைவுற்று, புனித நீர்க்குடங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டது. அய்யனார், விநாயகர், முருகன், சன்னாசியார், காரையடி அய்யனார், ஆராத்திகாரியம்மன், அடைக்கலம் காத்த அய்யனார், பெரிய கருப்பர், சின்னக்கருப்பர், கருப்பாயி அம்மன், முனீஸ்வரர், வீரபத்திரர், பட்டவர், மதுரை வீரன், சப்த கன்னிமார், முன்னோடியான் உள்ளிட்ட பரிவார சுவாமிகளின் சந்நிதி கோபுரக் கலசங்கள் மற்றும் குதிரையின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில், அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் பிரமுகர்கள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்கலந்துகொண்டனர். இந்த விழாவையொட்டி, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

SCROLL FOR NEXT