ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி கோயிலில் நடைபெற்ற நேற்று கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள். (உள்படம்) ராஜகோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றிய சிவாச்சாரியார்கள். 
ஆன்மிகம்

மடவார் வளாகத்தில் 16 ஆண்டுகளுக்கு பிறகு வைத்தியநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

செய்திப்பிரிவு

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில், சிவனின் 24 திருவிளையாடல்கள் நடைபெற்ற சிறப்புக்குரியது. இக்கோயிலில் 2006-ல்கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏறத்தாழ 16 ஆண்டுகளுக்குப் பிறகுகும்பாபிஷேகம் நடத்துவதற்காக 2022-ல் பாலாலயம் செய்யப்பட்டது.

கடந்த 26-ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நேற்று காலை கும்பாபிஷேகத்தையொட்டி திருமுறை பாராயணம், 6-ம் கால யாக பூஜை, பூர்ணாஹுதி, செய்யப்பட்டு, காலை 5.30 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, காலை 8.20 மணிக்கு ராஜகோபுரம் உட்பட அனைத்து விமான கோபுரங்களுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் சிவகாமி அம்பாள் உடனுறை வைத்தியநாத சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. மாலையில் சிவகாமி அம்பாள், வைத்தியநாத சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதில் மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான சிவ பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். மதுரை ஆதீனம் ஸ்ரீ ஹரிஹர தேசிக ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரியார், திருப்பூர் மாவட்டம் கூனம்பட்டி கல்யாணிபுரம் ஆதீனம் ஸ்ரீமத் ராஜ சரவண மாணிக்கவாசகர், செங்கோல் ஆதீனம் ஸ்ரீசிவப்பிரகாச தேசிக ஞான சுவாமிகள், தருமபுரம்ஆதீனம் கட்டளை தம்பிரான் ஸ்ரீமத் மீனாட்சி சுந்தர தம்பிரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் (பொ) முத்து மணிகண்டன், தக்கார் லட்சுமணன் மற்றும் அதிகாரிகள் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT