ஆன்மிகம்

பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: பதிவு செய்ய இணையதளம் அறிமுகம்

ம.மகாராஜன்

சென்னை: அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்க விரும்புவோர் தங்களை பதிவு செய்வதற்காக தனி இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் கடவுள் முருகனின் பெருமையை உலகெங்கும் உள்ள முருகபக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், பழநியில் வரும் ஆக.24, 25-ம் தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் உள்ள சமயப் பெரியோர்கள், ஆன்மிக அன்பர்கள், முருக பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொள்கின்றனர்.

இதையொட்டி விழா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தல், விளம்பரப் பணிகள் மேற்கொள்ளுதல், ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தல், முக்கிய பிரமுகர்களை வரவேற்று வசதிகளை செய்து தருதல் போன்ற பணிகளுக்காக ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல அறுபடை வீடுகளின் கண்காட்சி அரங்கு, ஆராய்ச்சிக் கட்டுரைகள் வாசிக்க ஆய்வரங்கம், மக்கள் அனைவரும் தாமே வழிபடும் வகையில் வேல்கோட்டம் என முருகனின் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் மாநாடு அமைக்கப்பட்டு வருகிறது.

மாநாட்டில் வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து மாநாட்டில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் வரும் ஜூலை 15-ம் தேதிக்குள் தங்களை பதிவு செய்வதற்கும், முருகனை கருப்பொருளாகக் கொண்ட ஆய்வுக் கட்டுரைகளை ஜூன் 20-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும் https://muthamizhmuruganmaanadu2024.com/ என்ற தனி இணையதளம் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தை இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் குழு உறுப்பினர்களான கவுமார மடம் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள், முதுமுனைவர் மு.வெ.சத்தியவேல் முருகனார் உள்ளிட்டோர் சென்னை நுங்கம்பாக்கத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை செயலர் க.மணிவாசன், சிறப்பு பணி அலுவலர் ஜெ.குமரகுருபரன், ஆணையர் க.வீ.முரளீதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT