மதுரகவியாழ்வார் ஜெயந்தி: ஏப்ரல் 29
மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ
ஆசார்ய தேவோ பவ, அதிதி தேவோ பவ
தாயை தெய்வமாகப் போற்றுங்கள், தந்தையை தெய்வமாகப் போற்றுங்கள். ஆசிரியரை தெய்வமாகப் போற்றுங்கள். விருந்தினரை தெய்வமாகப் போற்றுங்கள் என்று சொல்கிறது தைத்திரீய உபநிடதம். அதனைப் பின்பற்றி ஆசிரியரை தெய்வமாகப் போற்றி வாழ்ந்தவர் தான் மதுரகவியாழ்வார்.
ஈசுவர ஆண்டு சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில், தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரிக்கு அருகில் உள்ள திருக்கோளூர் என்னும் திவ்யதேசத்தில் பிராமண குடும்பத்தில் அவதரித்தவர் மதுரகவியாழ்வார். இளமையில் எல்லாக் கலைகளையும் பெற்று, கவிபாடுவதில் வல்லவராகி ‘மதுரகவி’ என்னும் பெயர் பெற்றார். வடநாட்டு திவ்ய தேசங்களைச் சேவித்து வர வடநாடு சென்றார். அயோத்தி நகரை அடைந்து அங்கு விக்கிரக வடிவில் இருந்த ஸ்ரீராமன், சீதாப்பிராட்டியாரை வழிபட்டு சில நாட்கள் தங்கியிருந்தார்.
ஒரு நாள் தன் ஊரான திருக்கோளூர் அமைந்திருக்கும் தென் திசை நோக்கித் தொழுகையில், தெற்கே தொலைவில் ஒரு பேரொளி இவர் கண்ணுக்கு புலப்பட்டது. அது ஏதோ ஒரு அற்புதத்தைக் குறிக்கிறது என்பதை உணர்ந்த மதுரகவியார், அவ்வொளி நோக்கி தன் பயணத்தை தொடங்கினார். இரவில் மட்டுமே நடந்தார். அவ்வொளி சற்றும் குலையாமால் சுடர் விட்டு ஒளிர, தென் திசை நோக்கி பயணித்தார். பலமாதங்கள் நடந்து களைத்து, அவ்வொளி தோன்றிய இடம் தன் ஊரான திருக்கோளூருக்கு மிக அருகே உள்ள திருக்குருகூரை சுட்டுவதை அறிந்தார்.
தாமிரபரணி நதிக்கரையில் அமைந்த ஆழ்வார் திருநகரி என்று வழங்கப்பெறும் திருக்குருகூர் திவ்ய தேசத்தில், வேளாளர் குலத்தில் வந்த காரியார் என்பவருக்கும், திருவண் பரிசாரத்தைச் சார்ந்த திருவாழ்மார்பர் என்பவரின் திருமகளாகிய உடைய நங்கையார் என்பவருக்கும் திருக்குறுங்குடிப் பெருமான் அருளால் வைகாசி விசாகத்தில் ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அது பிறந்த நாள் முதல் அழாமல், பால் உண்ணாமல் அமைதியாக இருந்தது.
எனவே, அக்குழந்தைக்கு மாறன் என்று பெயரிட்டு அவ்வூரில் உள்ள ‘பொலிந்து நின்ற பிரான்’ என்று அருள்பாலிக்கும் பெருமான் சந்நிதியில் விட்டனர். அக்குழந்தை அங்குள்ள புளியமரத்தின் பொந்தில் சென்று அமர்ந்தது. 16 ஆண்டுகள் அங்கேயே தவக்கோலத்தில் இருந்தது. சடகோபன் என்றும் அழைக்கப்பட்ட அக்குழந்தையே பின்னர் நம்மாழ்வார் ஆனது.
மதுரகவியாழ்வார் தன்னை ஈர்த்து அழைத்த பேரொளி திருக்குருகூரில் இருந்து வந்தது என்பதை உணர்ந்து, அங்கு என்ன அதிசயம் என்று விசாரித்து, புளியமரத்தை வந்தடைந்தார். ஒரு சிறு கல்லை எடுத்து தவக்கோலச் சிறுவன் முன் இட்டு ஒலி எழுப்பினார். சடகோபர் கண் விழித்தார். மதுரகவிகள் அவரிடம்
“ செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால்
எத்தைத் தின்று எங்கே கிடக்கும்” என்று வினவினார். அதற்கு அவர்
“அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்று பதிலளித்தார்.
செத்தது – உடல் என்பது மூலப்பகுதியின் விகாரமாய் உள்ளது. அறிவற்றது. சிறியது –உயிர். அணு வடிவினானது. அது உடல் முழுதும் ஞானத்தினால் வியாபித்து, உடல் முழுதும் நடைபெறும் நிகழ்ச்சிகளை அறிகிறது. அதனால், அதனைச் ‘சிறியது’ என்றார். பிறத்தல் – உயிர் தன் வினைகளுக்கு ஏற்ற உடம்பை அடைந்த பின், எதனை அனுபவித்து எங்கே இருக்கும்? என்று மதுரகவி கேட்டார். “உடம்பை அடைந்த உயிர் தன் வினைப்பயனை அனுபவித்துக் கொண்டு, அவ்வுடம்பிலேயே இருக்கும் என்று சடகோபர் பதிலளித்தார். இப்பதிலைக் கேட்டதும், மதுரகவிகள் சடகோபரை ஆச்சாரியராக ஏற்றார்.
சடகோபரைத் தன் ஆச்சாரியராக ஏற்ற நாள் முதல் அவருக்கு தொண்டு செய்வதையே தன் வாழ்நாள் பணியாகக் கொண்டார். ஆசிரியர் வேறு குலத்தைச் சார்ந்தவர் என்பதோ, தன்னை விட வயதில் இளையவர் என்பதோ மதுரகவியின் குருபக்தியை எவ்வகையிலும் தடை செய்யவில்லை. சடகோபர் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி போன்றவற்றை இயற்றினார். மதுரகவிகளுக்கு உபதேசித்தார். மதுரகவி சடகோபர் மீது பேரன்பு கொண்டு, அவரையே தெய்வமாக எண்ணி, அவர்மீது பத்துப் பாசுரங்களைப் பாடினார்.
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டு உண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்,
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்,
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே.
என்று தொடங்கும் பாசுரத்தில், ஆசிரியரின் பெயரைச் சொல்லும்போதே நாவில் அமுது ஊறுகிறது என்று நெகிழ்கிறார்.
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்,
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே!
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி,
பாவின் இன்னிசை பாடித் திரிவனே.
ஆசிரியர் அல்லாது வேறு தெய்வம் அறியேன் என்று சொல்கிறார். குருபக்தியின் உச்சம் இது. அதனாலேயே அதன் முதல் வார்த்தையைக் கொண்டு “கண்ணிநுண் சிறுதாம்பு” என்றே அழைக்கப்பட்டு நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. நாலாயிர திவ்யப் பிரபந்தம் என்பது ஆழ்வார்கள் ஸ்ரீமன்நாராயணனைத் துதித்துப் பாடிய பாடல்களின் தொகுப்பே. அதில் ஒரு ஆழ்வாரான நம்மாழ்வார் என்ற சடகோபரைத் துதித்த இப்பாசுரமும் இடம்பெற்றது மதுரகவிகளின் ஆசிரியர் பக்திக்கு அங்கீகாரமே. இன்னொரு சிறப்பாக, பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராகவும் மதுரகவிகள் இடம்பெற்றார்.