காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளானநேற்று நடைபெற்ற தேரோட்டத்தின்போது, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
காஞ்சிபுரம் நகரப் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்கு வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய உற்சவமான கருடசேவை கடந்த 22-ம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில், பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான நேற்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, நேற்று அதிகாலைகொண்டை முடிச்சு அலங்காரத்தில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவர் வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்து பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாகச் சென்று, தேரில் எழுந்தருளினார்.
தொடர்ந்து, அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் வடம் பிடித்துஇழுத்து, தேரோட்டத்தை தொடங்கிவைத்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’என்ற முழக்கத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். காந்திசாலை, மூங்கில் மண்டபம், காமராஜர் சாலை, பேருந்து நிலையம் வழியாக நான்கு ராஜ வீதிகளில் நடைபெற்ற தேரோட்டம், மீண்டும் நிலையை அடைந்தது.
பிற்பகலில் பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து, தேரில் எழுந்தருளிய வரதராஜப் பெருமாளை தரிசித்தனர். தேரோட்டம் காரணமாக காஞ்சிபுரம் நகரமே விழாக்கோலம் பூண்டது. மேலும், காந்தி சாலையில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
தேரோட்டத்தின்போது வழி நெடுகிலும் பக்தர்களுக்கு நீர் மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் வடக்கு மண்டல டிஐஜி பொன்னி, எஸ்.பி. சண்முகம் தலைமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.