நாகப்பட்டினம்: 250 ஆண்டுகளுக்கு முன்பு டச்சுக்காரர்களால் நாகப்பட்டினத்தில் கட்டப்பட்ட தூய பேதுரு ஆலயம், பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
நாகை பழைய பேருந்து நிலையம் அருகே தூய பேதுரு ஆலயம் கி.பி.1774-ல் கட்டப்பட்டது. 250 ஆண்டுகளாக டச்சுக்காரர்களின் வரலாற்றுச் சுவடாக நிலைத்து நிற்கும் இந்த ஆலயம், நாகையின் அடையாள சின்னங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. சூரிய ஒளி மூலம் சுட்ட செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் வழுவழுப்பான தரை, பனை மர உத்திரங்கள் மற்றும் ஓட்டினால் ஆன கூரைகள் ஆகியன டச்சு பாரம்பரிய கட்டிடக் கலைக்குச் சான்றாக உள்ளன.
சுண்ணாம்புக்கற்களால் பிரம்மாண்ட தூண்களுடன் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயத்தில், பல்வேறுகாலக்கட்டங்களில் மழை, புயலால் சேதம் ஏற்பட்டது. சுவர்களிலும் விரிசல் ஏற்பட்டதையடுத்து, ஆலயத்தைப் புனரமைக்க முடிவு செய்யப்பட்டு, ஓராண்டுக்கு முன்பு பணிகள் தொடங்கின. அனைத்துத் தரப்பு மக்களின் பங்களிப்புடன் ரூ.75 லட்சத்தில்புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பழமை மாறாமல்ஆலயத்தின் உட்புறம் முழுவதும்தேக்கு மரங்களால் கலைநுட்பங்களுடன் கட்டமைப்புகள் அமைக்கப்பட்டன.
ஆலயத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள தேக்கு மரத்தால் ஆன இருக்கைகள், அருளுரை மேடை, பெரிய அளவிலான ஞானஸ்நான தொட்டி ஆகியவை டச்சு காலத்தை நினைவூட்டும் வகையில் உள்ளன. மேலும், இசைக் கலைஞர்களின் இருக்கைகள், முலாம் பூசப்பட்ட இசைக்குழல், பிரம்மாண்ட மரத்தால் செய்யப்பட்ட ஹேண்ட் ஆர்கன் ஆகியவை 250 ஆண்டுகளாக அதே செயல்பாட்டுடன் நிலைத்து நிற்பது கூடுதல் சிறப்பு. மேலும், பிரம்மாண்ட மரத்தூண்கள், மரச்சிற்பங்கள், அதிகாரிகளின் நினைவுக்கேடயங்கள், சுவரில் பொறிக்கப்பட்டுள்ள ராணியின் சிற்பங்கள் ஆகியவையும் காண்போரை பிரமிக்க வைக்கின்றன.
400 அடி நீளம், 250 அடி அகலத்தில் கிழக்கு- மேற்காக அமைந்துள்ள இந்த ஆலயத்தில் டச்சு எழுத்துகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பழமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பெயரளவில் சொல்லாமல், 250 ஆண்டுகள் பழமையான டச்சுக்காரர்களின் ஆலயத்தை அதே நிலையில் மீட்டெடுத்திருப்பது அனைவரின் வரவேற்பைப் பெற்றுள்ளது.