ஆன்மிகம்

ஆசையைத் துறக்கும் மனப் பக்குவம்

ஆதி

புத்தர் முதல் உபதேசத்தில், தன் ஐந்து சீடர்களுக்கும் ஏற்ற தவ நெறிமுறைகளைப் போதித்தார். அவர்கள் ஐந்து பேரும் கடும் தவ வாழ்வை அவர் கைவிட்டபோது, அவரை விட்டு நீங்கியவர்கள். அதனால் அவர்களுக்கு மிதமான தவ முயற்சியின் மேன்மையை எடுத்துரைத்தார்.

மகிழ்வான வாழ்வின் மீதான நாட்டம், சிரமமான தவம் வழி செல்வது இரண்டும் தவறே. இந்த இரண்டு மாறுபட்ட வழிமுறைகளையும் விடுத்து, மிதமான தவ வாழ்வை மேற்கொண்டால்தான் மனதைக் கட்டுப்பாடான வழியில் செலுத்த முடியும். உடலைத் தூண்டும் இச்சை உணர்வுகளைப் போலவே, உடலை வருத்தும் தவ நெறிமுறைகளும் மனதை ஒருநிலைப்படுத்த முடியாது.

ஆசைகளைத் துறப்பது

மனிதன் தன் மனதை ஏன் ஒருநிலைப்படுத்த வேண்டும்? மூப்பு, பிணி, சாவு ஆகிய மூன்று வகையான கஷ்டங்களை மனிதன் அனுபவிப்பதைப் புத்தர் உணர்ந்தார். இயற்கை நியதிக்கு உட்பட்டு உடல் கஷ்டப்பட்டாலும், மனது பற்றற்றுச் சுதந்திரமாக இருந்தால் மனிதன் தன் கஷ்டங்களிலிருந்து நிச்சயம் விடுபடலாம் என்று அவர் நினைத்தார். ஆசையே அழிவுக்குக் காரணம் என்று தெளிவு பெற்றதால், ஆசையைத் துறக்கும் மனப் பக்குவத்தை மனிதர்களுக்குப் புத்தர் பரிந்துரைத்தார். பல விதமான ஆசைகளைத் துறப்பது எளிதல்ல என்பதையும் மனிதனுக்குப் புரியவைத்தார்.

தன் உயர்ந்த நோக்கத்துக்கு மனதை எப்படிப் பணிய வைப்பது என்பதற்காக ‘8 நோக்கப் பாதை' எனும் புதிய பாதையை வகுத்தார். இந்தப் பாதை எட்டு சீரிய நோக்கங்களைக் கொண்டது. அவை செம்மையான - உயர்ந்த பார்வை, நோக்கம், பேச்சு, செயல், வாழ்வு, முயற்சி, எண்ணம், தியானம் ஆகியவை.

இவற்றில் முதல் இரண்டும் வாழ்வைப் பார்க்க உதவும் கண்ணோட்டங்கள். அடுத்த மூன்றும் எளிய நெறிமுறைகள், இறுதி மூன்றும் மனதைக் கட்டுப்படுத்த உதவும் பயிற்சி முறைகள்.

நோக்கப் பாதை

புத்தர் கூறும் செம்மையான பார்வையைப் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டுமானால், மனிதன் தன் வாழ்நாளில் அடையப் போகும் கஷ்டங்களைப் பற்றிய தெளிந்த அறிவைக் கொண்டிருக்க வேண்டும். உயர்ந்த நோக்கம் பெற, ஆசையை அடக்கிக் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும். செம்மையான பார்வையும் உயர்ந்த நோக்கமும் மனிதனைச் சுயநலத்திலிருந்து விடுவித்து வெற்றி பெறச் செய்யும்.

உயர்ந்த பேச்சு எனும் வாழ்க்கை நெறிமுறை பொய், புறங்கூறல், கெட்ட வார்த்தை பேசுதல், வெட்டிப் பேச்சு ஆகிய கெட்ட குணங்களை விட்டொழிக்க வேண்டும் என்பதன் அவசியத்தை உள்ளடக்கியது. சரியான செயல் என்பது மற்ற உயிர்களைக் கொல்லுதல், பிறர் உடைமைகளைக் கவர்தல், உடல் இச்சையை வளர்த்தல் ஆகியவற்றைத் தவிர்ப்பதே. உயர்வான வாழ்வு என்பது எந்தத் தவறும் செய்யாமல், நல்லொழுக்கத்தைக் கடைப்பிடிப்பதே.

இந்த வாழ்வு நெறிமுறைகளுக்கு அடுத்ததாக, மூன்று விதமான மனக் கட்டுப்பாட்டுப் பயிற்சி முறைகள் உள்ளன. உயர்வான முயற்சி என்பது முழு மனதோடும், முழு உற்சாகத்தோடும், தீயவை விடுத்து, நல்லவற்றை நாடுவது. சரியான எண்ணம் என்பது எப்போதும் விழிப்போடு இருந்து தன் உணர்வுகள், செயல்கள் ஆகியவற்றை அடக்கி ஆளுவது. சரியான தியானம் என்பது மனதை அமைதிப்படுத்தி, ஆசைகளுக்கு அப்பாற்பட்ட சலனமற்ற நிலை ஒன்றை மெதுவாகச் சென்றடைவது.

இந்த எட்டு வகை நல்வாழ்வு மார்க்கத்தை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று புத்தர் வலியுறுத்தினார்.

SCROLL FOR NEXT