சென்னை: சென்னை அக்கரையில் உள்ள இஸ்கான் கோயிலில் பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு புஷ்ப அபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமிக்கு புஷ்ப அபிஷேகம் செய்தனர்.
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை அக்கரையில் உள்ள ஸ்ரீஅரி ராதாகிருஷ்ணர் கோயிலில் ஆண்டுதோறும் புஷ்ப அபிஷேக விழா (‘பூலோன்வாலி ஹோலி’) கொண்டாடப்படுகிறது.
பகவான் கிருஷ்ணருக்கு பல்வேறு ஆடை,ஆபரணங்களாலும், பல வண்ண மலர்களாலும் கோபிகைகள் அலங்காரம் செய்து மகிழ்ந்ததை குறிக்கும் விதமாக, இந்த விழா நடைபெறுகிறது.
அந்த வகையில், அக்கரை ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ணர் கோயிலில் 12-வது ஆண்டு புஷ்ப அபிஷேக விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, காலை9 மணிக்கு கீர்த்தன மேளா, மாலை 6 மணிக்கு சொற்பொழிவு, 6.30 மணிக்கு ஆரத்தி ஆகியவை நடைபெற்றன.
தொடர்ந்து, இரவு 7மணிக்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு புஷ்ப அபிஷேகம் நடைபெற்றது. அப்போது, பல்வேறு வகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த கிருஷ்ணருக்கு பக்தர்கள் மலர்களால் புஷ்ப அபிஷேகம் செய்தனர்.
இரவு 7.45 மணி அளவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட மலர்களும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஹரே கிருஷ்ண கீர்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.