ஆன்மிகம்

ஜோதிடம் அறிவோம்! 31: இதுதான்... இப்படித்தான்! ஜாதகத்திலேயே இருக்கு குலதெய்வ விவரம்!

செய்திப்பிரிவு

ஜோதிடர் ஜெயம் சரவணன்

நட்சத்திரங்களைப் பற்றிய விபரங்களைப் பார்க்கலாம் என ஆரம்பித்தோம். ஆனால் குலதெய்வம் பற்றிய சந்தேகங்கள் அதற்கான விளக்கங்கள் கேட்டு நிறைய கேள்விகள் வந்திருக்கின்றன.

எனவே குலதெய்வத்தைப் பற்றிய விளக்கங்களை இன்னும் சற்று விரிவாக பார்த்துவிடுவோமா?

ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு 2 ஆண்பிள்ளை இருக்கிறார்கள். அடுத்தவருக்கு 2ம் பெண்பிள்ளைகள், மூன்றாமவருக்கு குழந்தை இல்லை.

இது ஏதும் குலதெய்வக் குறையா? என்ற கேள்வி வாசகர் ஒருவரால் எழுப்பப்பட்டது.

ஆண் குழந்தை இருந்தால் குலதெய்வ வழிபாடு தொடரும் என்ற கருத்தை மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொண்டு சந்தோஷம் அடைந்தவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

அதேசமயம், பெண் குழந்தை மட்டும் பெற்றவர்கள் மிகவும் வருத்தம் அடைந்திருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை,

அதிலும் குழந்தைபாக்கியம் இல்லாதவர்கள் சொல்ல முடியாத வருத்தத்துக்கு ஆளாகியிருப்பார்கள்.

இவர்களுக்கு நான் இப்போது கூறும் கருத்து, மனதை இதமாக்கும் என்பது உறுதி.

ஆண் வாரிசை உடையவர்கள் அவர்களுடைய காலத்திற்குப்பின் வருடாவருடம் திதி என்னும் தர்ப்பணம் செய்யக் கடமை உடையவர்கள்.

பெண் குழந்தை பெற்றவர்களுக்கு அந்தக் கவலை தேவையில்லை. ஏன் தெரியுமா?

இனி அவர்களுக்கு மறு ஜென்மம் என்பதே இல்லை. இனி பிறப்பு இல்லாதவர்களுக்கு தர்ப்பணம் எதற்கு? எனவே குலதெய்வ வழிபாடு முற்றுப்பெறும் என்ற வேதனையை விட “பிறப்பில்லா பெருவாழ்வு” என்பது மிகவும் உயர்ந்தது; உன்னதமானது!

வாரிசே இல்லாதவர்க்கும் இதே பதில்தான்.

இங்கு ஒரு அறிவுரை...

தயவுசெய்து உங்கள் பிள்ளைகளுக்கு பாட்டன், முப்பாட்டன், கொள்ளுத் தாத்தா, எள்ளுத்தாத்தா என அவர்களின் பெயர்களையும் அவர்களையும் தெரிந்த அளவுக்குச் சொல்லித்தாருங்கள்.,

இப்போது தாத்தா பெயரைத் தவிர முன்னோர் பெயர்கள் பெரும்பாலானவர்களுக்குத் தெரிவதில்லை. எனவே கற்றுக்கொடுங்கள். அது நல்லது.

ஒருசிலருக்கு “நான் பல வருசமா என் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செஞ்சிட்டு வரேன். எல்லாப் பெயரையும் சரியாச் சொல்லுவேன், ஆனா இப்ப ஒரு தாத்தா பெயரை மறந்துட்டேன்” என்பவர்களுக்கு...

இது உங்கள் மறதி அல்ல, எந்தப் பாட்டன் பெயரை மறந்தீர்களோ... அவர் “சொர்க்கம் சென்று விட்டார் என அர்த்தம்.” எனவே, மறந்தவர் பெயரைத் தெரிந்துகொள்ள வேண்டும் என மெனக்கெடாதீர்கள்.

இன்னும் சிலர் “என் குலதெய்வத்தை எப்படித் தெரிந்து கொள்வது” என்று கேட்கிறார்கள்.

எளிமையான விளக்கத்தின் மூலமாக நான் தரும் குறிப்புகள் மூலம் உங்கள் குலசாமியை அறிந்துகொள்ளலாம்.

உங்கள் ஜாதகத்தில் 5 ம் இடம் உங்கள் குலதெய்வத்தை குறிக்கும் இடமாகும்.

அதாவது லக்னம் என்னும் கட்டம் ஒன்று என எண்ண ஆரம்பித்து கடிகாரச் சுற்றுப்படி எண்ணி வர 5ம் இடம் குலதெய்வத்தைக் காட்டும்.

சரி, கட்டம் தெரிந்து கொண்டோம். தெய்வத்தை எப்படி அறிவது? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

5 ல் சூரியன் இருக்க, சிவன் சம்பந்தபட்ட தெய்வம் குலதெய்வம் என்பதாகச் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம்.

சந்திரன் இருக்க சாந்த சொரூப சக்தி வடிவ அம்மன், குலதெய்வமாக இருக்கிறாள் என்று அர்த்தம்.

செவ்வாய் இருந்தால் முருகப் பெருமான் குலதெய்வம் என்றும், மற்றும் சக்திவடிவான அம்மன் தெய்வங்கள் குலதெய்வம் என்றும்,

புதன் இருக்க மகாவிஷ்ணு தொடர்புடைய ஆலயம், குலதெய்வக் கோயில் என்றும் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம்.

குருபகவான் இருந்தால் சித்தர்கள், ஞானிகள் தொடர்புடைய ஆலயங்கள்,

சுக்கிரன் இருந்தால் மகாலக்ஷ்மி, பெருமாள் தொடர்பான ஆலயங்கள்,

சனிபகவான் இருந்தால் எல்லைத் தெய்வங்கள், ஐயனார், ஐயப்பன், சாஸ்தா முதலான தெய்வங்கள் குலதெய்வம் என்று அறிந்து உணரலாம்.

ராகு இருக்க ரத்தபலி கேட்கும் தெய்வங்கள், உக்கிரமான பெண் தெய்வங்கள், எல்லை தெய்வங்கள் முதலான தெய்வங்களில் ஒன்று, குலதெய்வமாக நம்மை வழிநடத்துகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

கேது இருக்க எல்லை பெண் தெய்வங்கள், கூரைகூட இல்லாத வெட்ட வெளியில் உள்ள தெய்வங்கள்,ஊருக்காக தியாகம் செய்து சாமியாக மாறியவர்கள்,சித்தர் பீடங்கள், ஜீவசமாதி அடங்கிய ஆலயங்கள் குலதெய்வ தலம் ஆகும்.

இனி அடுத்ததடுத்த பதிவுகளில் நட்சத்திரங்களைப் பற்றி முழுமையாக அறிவோம்.

இன்னும் துல்லியமாக அறிந்து கொள்ள வேண்டும் என்றால் உங்கள் ஜாதகத்தை ஆராய்ந்துதான் அறிந்து கொள்ள முடியும்.

ஒரு நல்ல ஜோதிடரை அணுகி உங்கள் குலதெயவத்தை அறிந்து கொள்ளுங்கள்.

ஜோதிடரைத் தொடர்பு கொள்ள:98841 60779

அடுத்த அத்தியாயம் வரும் 18.4.18 புதன்கிழமை அன்று வெளிவரும்.

- தெளிவோம்

SCROLL FOR NEXT