ஆண்டாள் கோயிலில் இருந்து மாலை, பட்டு வஸ்திரங்கள் உள்ளிட்டவற்றை யானை மீது வைத்து ஊர்வலமாக நேற்று ஸ்ரீரங்கம் கோயிலுக்கு எடுத்துவந்த ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் நிர்வாகிகள். படம்: ர.செல்வமுத்துகுமார் 
ஆன்மிகம்

ஸ்ரீரங்கத்தில் இன்று சித்திரை தேரோட்டம்: ரங்கநாதருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் வஸ்திர மரியாதை

செய்திப்பிரிவு

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரைத் தேரோட்டம் இன்று (மே 6)நடைபெறுகிறது. இதை முன்னிட்டுஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்ட வஸ்திரங்கள் நேற்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வந்து சேர்ந்தன.

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த ஆண்டாள், பெருமாள் மீதிருந்தபக்தியால் அவருக்கு பூ மாலை தொடுக்கும் தொண்டு செய்து, அவருக்கு மனைவியானாள். ஆண்டாள் மணமுடித்து பெருமாளுடன் ஐக்கியமானது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் என்பதால், ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலுக்கும், ஸ்ரீரங்கம் கோயிலுக்குமிடையே சம்பந்தமும், உறவும், மங்கலப் பொருட்கள் பரிவர்த்தனை செய்யும் வழக்கமும் உள்ளது.

அதன்படி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர்கோயில் சித்திரைத் தேரோட்டத்துக்கு முதல்நாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்தும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டத்துக்கு முதல்நாள் ஸ்ரீரங்கத்தில் இருந்தும் மங்கலப் பொருட்கள் பரிவர்த்தனை நடைபெறும்.

இந்நிலையில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரைத் தேரோட்டம் இன்று நடைபெறுவதையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து எடுத்து வரப்பட்ட ஆண்டாள் அணிந்த மாலை, பட்டு வஸ்திரங்கள், மலர்கள் மற்றும் இலைகளால் செய்யப்பட்ட கிளிகள், பழங்கள் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் நேற்று காலை 6.30 மணியளவில் ஸ்ரீரங்கம் ரங்கவிலாச மண்டபத்தில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன.

பின்னர், மங்கலப் பொருட்கள் மேளதாளத்துடன் யானை மீது வைத்து ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வரப்பட்டன.

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் நிர்வாக அலுவலர் லட்சுமணன், அறங்காவலர் நளாயினி, ஸ்தலத்தார் ரமேஷ் மற்றும் கோயில் பணியாளர்கள் வஸ்திர மரியாதையை ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரியப்பனிடம் வழங்கினர். இன்று நடைபெறும் சித்திரைத் தேரோட்டத்தின்போது, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை மற்றும் வஸ்திரங்களை அணிந்து நம்பெருமாள் தேரில் எழுந்தருள்வார்.

SCROLL FOR NEXT