ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் நேற்று மாலை குரு பகவானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. 
ஆன்மிகம்

ஆலங்குடி, திட்டை கோயில்களில் குரு பெயர்ச்சி விழா கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

செய்திப்பிரிவு

திருவாரூர்: ஆலங்குடி, திட்டை குரு பகவான் கோயில்களில் குரு பெயர்ச்சி விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குரு பகவானுக்கு தனி சந்நிதி உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெறும்.

நடப்பாண்டு குரு பகவான் நேற்று மாலை 5.19 மணிக்கு மேஷ ராசியில் இருந்து, ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார். இதையொட்டி குரு பகவானுக்கு நேற்று மாலை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக நேற்று காலை குரு பகவானுக்கு 1,008 லிட்டர் பால், மஞ்சள், இளநீர் போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் குரு பகவானுக்கு நடைபெற்ற தீபாராதனை.

விழாவையொட்டி, திருவாரூர் எஸ்.பி. ஜெயக்குமார் மேற்பார்வையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பல்வேறு ஊர்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதேபோல, தஞ்சாவூர் அருகே திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் தனி சந்நிதியில் அருள்பாலித்து வரும் குரு பகவானுக்கு, குரு பெயர்ச்சியையொட்டி நேற்று மாலை 5.19 மணிக்குமகா தீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக, குரு பகவானுக்கு சிறப்பு பூஜை, யாகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, சுவாமி தரிசனம் செய்தனர்.

வரும் 6-ம் தேதி ஏகதினலட்சார்ச்சனையும், 7, 8-ம் தேதிகளில் பரிகார ஹோமமும் நடைபெறஉள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT