ஓசூரில் வெயிலின் உக்கிரம் குறைய வேண்டி பெண்கள் பால்குடம் எடுத்து மாரியம்மனுக்கு வழிபாடு செய்தனர். 
ஆன்மிகம்

வெப்பம் தணிய வெயில் மாரியம்மனுக்கு பால்குடம் எடுத்து ஓசூர் பெண்கள் வழிபாடு!

கி.ஜெயகாந்தன்

ஓசூர்: வெயிலின் உக்கிரம் குறையவும், மழை பொழிய வேண்டியும் வெயில் மாரியம்மனுக்கு ஓசூரில் பெண்கள் பால் குடம் எடுத்து வழிப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், நிலத்தடி நீர் குறைந்து கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் தண்ணீரின்றி அவதியடைந்து வருகின்றனர். இதனால் ஓசூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பொதுமக்கள் மழை வேண்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.

இன்று ஓசூர் முத்துராயன் ஜிபி பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் அப்பகுதியில் உள்ள வெயில் மாரியம்மனுக்கு வெயிலின் உக்கிரம் குறைந்து மழை பெய்ய வேண்டி பால் குடம் எடுத்து ஊர்வலகமாக வந்தனர். பால், பன்னீர், இளநீர் உள்ளிட்டப் பொருட்களால் அபிஷேகம் செய்து, அம்மனை குளிர்விக்கும் வகையில் சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது,“ஒவ்வெரு ஆண்டும் கோடைக்காலங்களில் வெயிலின் உக்கிரம் அதிகரிக்கும் போதும், மழை பெய்து விவசாயம் செழிக்க தங்கள் பகுதியில் உள்ள கன்னட மொழியில் (பிசிலு) என்றழைக்கபடும் வெயில் மாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் போன்ற திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்து அம்மனின் உக்கிரத்தை குறைப்போம். இதனையடுத்து வெயில் குறைந்து மழை பெய்யும் என்பது எங்களது நம்பிக்கை. அதேபோல் நிகழாண்டும் வெயிலின் உக்கிரம் குறைய பிசிலு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிப்பட்டோம்” என்று கூறினர்

SCROLL FOR NEXT