மயிலாப்பூர் வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் ‘இந்து குழுமம் ’ சார்பில் 1924-ம் ஆண்டு கட்டப்பட்ட ஸ்ரீநிவாச பெருமாள் சந்நிதியின் 100-வது ஆண்டை (சதமான உற்சவம்) முன்னிட்டு, நேற்று 100 நாதஸ்வரம், தவிலுடன் சுவாமி வீதியுலா நடைபெற்றது. 
ஆன்மிகம்

‘இந்து குழுமம்’ சார்பில் கட்டப்பட்ட ஸ்ரீநிவாச பெருமாள் சந்நிதியின் 100-ம் ஆண்டு விழா: மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் 100 நாதஸ்வரம், தவிலுடன் பக்தர்கள் சூழ சுவாமி வீதியுலா

கே.சுந்தரராமன்

சென்னை: மயிலாப்பூர் வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் ’இந்து குழுமம்’ சார்பில் 1924-ம் ஆண்டு கட்டப்பட்ட ஸ்ரீ நிவாச பெருமாள் சந்நிதியின் 100-வது ஆண்டை (சதமான உற்சவம்) முன்னிட்டு, நேற்று 100 நாதஸ்வரம், தவிலுடன் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

சென்னை, மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் கோயில், 4 நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றியதாக அறியப்படுகிறது. 1832-ம் ஆண்டில் பக்தர்கள் சிலரால் ஸ்ரீ வேதாந்த தேசிகர், ஹயக்ரீவர் விக்கிரகங்கள் ஸ்தாபிக்கப்பட்டன.

1924-ம் ஆண்டு இந்து குழுமத்தின் பங்களிப்புடன் ஸ்ரீநிவாசப் பெருமாள் மற்றும் அலர்மேல்மங்கை தாயார் விக்கிரகங்கள் ஒரே சந்நிதியில் நிறுவப்பட்டன. தற்போது (2024-ம் ஆண்டு) ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாள் மற்றும் ஸ்ரீ அலர்மேல்மங்கை தாயாரின் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஏப். 18 தொடங்கி 22-ம் தேதி (நேற்று) வரை சாந்தி ஹோமம் நடைபெற்றது. 21-ம் தேதி மாலை உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

22-ம் தேதி காலை 5.30 மணிக்கு மூலவருக்கு திருமஞ்சனம், தொடர்ந்து வேத சாற்றுமுறை நடைபெற்றது. சதமான உற்சவ தினத்தில் சஹஸ்ர கலசாபிஷேகம், சதுர்வேத பாராயணம், நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடுதல், சதஸ், உபன்யாசம், இசை, நாட்டிய நிகழ்ச்சிகள், வேத பண்டிதர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தல், நன்கொடையாளர்களை கவுரவித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கோயில் மற்றும் கோயில் வரலாறு பற்றிய ஆவணப்படம் வெளியிடப்பட்டது. ஒரு வருட உற்சவம் மற்றும் கோயில் வரலாறு குறித்த சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது.

நேற்று மாலை 6.30 மணிக்கு 100 நாதஸ்வரம், தவில், வேத பாராயணம் மற்றும் பிரபந்தம், நாமசங்கீர்த்தனத்துடன் ஸ்ரீநிவாசப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீவேதாந்த தேசிகருடன் நான்கு மாடவீதிகளில் வீதியுலா சென்றார். எண்ணற்ற பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை தேவஸ்தானத்தின் அறங்காவலர்கள் ஆர்.ராகவன், ஆர்.அனந்தபத்மநாபன், ஆர்.முகுந்தன் சிறப்பாக செய்திருந்தனர்.

ஸ்ரீதே வி, பூதே வியுடன் ஸ்ரீ நிவாசப் பெ ருமாள். படங்கள்: எல்.சீனிவாசன்

நிகழ்ச்சி குறித்து அறங்காவலர்கள் கூறும்போது, “2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தெப்போற்சவம், வேத பாராயணம், இசை நிகழ்ச்சிகள் என்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தோம். கோயிலில் பல்வேறு கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினோம். ஆண்டு விழாக்கள் நடத்த தனி அறைகள் கட்டப்பட்டன. சம்ஸ்கிருதம், வேதங்கள், பிரபந்த வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய்தோம்.

இசை சொற்பொழிவுகள், நூல்கள் வெளியீடு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாரத்தான் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்றதற்காக சிறந்த உலக சாதனைகள் மற்றும் சிறப்பாக பராமரிக்கப்பட்ட கோயிலுக்கான விருதைப் பெற்றுள்ளோம்ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தின் பெயர் சர்வதேச சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இனிவரும் காலத்தில் தரைதளத்தில் உள்ள கட்டிடம் புனரமைக்கப்படும். சித்திர குளம் அருகே தேசிகர் சந்நிதிக்கு எதிரே நுழைவு அலங்கார வளைவு அமைக்கப்படும். கல்மண்டபம் புனரமைக்கப்படும். பிரகாரங்களில் இயற்கை கல் இடப்படும். தாயாருக்காக, பக்தர் ஒருவரால் அளிக்கப்பட்ட தேக்கு மரத் தேரில் தங்க முலாம் பூசப்பட்ட செப்பு தகடுகள் பதிக்கப்படும்.

கோயிலில் சம்ப்ரோக்‌ஷணம், கோபுரங்கள், கோயில் வளாகங்களில் ஓவியம் தீட்டுதல், அலர்மேல்மங்காபுரத்தில் பழைய சொத்துகளை புதுப்பித்தல், தீர்த்தவாரிக்கான இடத்தை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்தல், பக்தர்களின் பொதுநலனுக்காக ஆம்புலன்ஸ் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளோம்” என்றனர்.

SCROLL FOR NEXT