கண்ணகி கோயிலுக்கு குமுளி வனப்பாதை வழியே சென்ற பக்தர்கள். ( வலது ) சிலம்பம் ஏந்தியபடி அருள்பாலிக்கும் கண்ணகி. 
ஆன்மிகம்

மங்கலதேவி கண்ணகி கோயிலில் இன்று சித்ரா பவுர்ணமி விழா - 2 மாநில அரசுகள் சார்பில் ஏற்பாடுகள்

என்.கணேஷ்ராஜ்

குமுளி: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்காக, 2 மாநில அரசுகள் சார்பில் பக்தர்களுக்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேனி மாவட்டத்தின் தமிழக எல்லையான கூடலூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் விண்ணேற்றிப்பாறை எனும் இடத்தில் மங்கலதேவி கண்ணகி கோயில் அமைந்துள்ளது. மதுரையை எரித்துவிட்டு தலைவிரி கோலமாக வந்த கண்ணகிக்கு மங்கலநாண் பூட்டி, கோவலன் இங்கிருந்து விண்ணுக்கு அழைத்துச் சென்றதாக ஐதீகம். இக்கோயில் வனப்பகுதியில் அமைந்துள்ளதால், ஆண்டுக்கு ஒருமுறை சித்திரை மாத பவுர்ணமி நாளில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப் படுகின்றனர்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று ( செவ்வாய்க் கிழமை ) நடைபெறுகிறது. இதற்காக, தமிழகப் பாதையான பளியன்குடி வழியே நடந்து செல்லும் பக்தர்களுக்காக குடிநீர், உணவு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், கேரள பாதையான குமுளி, கொக் கரண்டம் வழியே ஜீப்பில் செல்பவர்களுக்கும் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. காலை 6 முதல் பிற்பகல் 2.30 மணி வரை பக்தர்கள் கோயிலுக்குச் செல்லலாம்.

கோயிலில் இருந்து மாலை 5.30 மணிக்குள் கீழே இறங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது. வனப்பகுதி என்பதால் கோயிலில் முன்னேற்பாடுகள் எதுவும் இருக்காது. எனவே இன்று அதிகாலையிலேயே அதற்கான பணிகள் தொடங்கும். அதற்காக பூசாரி வண்டி காலை 4 மணிக்கு அனுமதிக்கப்படும். இதில் வாழை மரம், மா இலை, சந்தனம், அம்மன் அலங்காரப் பொருட்கள் ஆகியவை கொண்டு செல்லப்படும்.

கோயிலில் கண்ணகி கற்சிலை உடைந்த நிலையில் இடுப்புக்குக் கீழ் உள்ள பகுதி மட்டுமே உள்ளது. முதல் கட்டமாக, இச்சிலைக்கு அபிஷேகம் செய்து மறைப்பு கட்டி உரு கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த வழிபாட்டுக்காக கண்ணகி பிறந்த ஊரான பூம்புகார் காவிரி பூம் பட்டினத்தில் இருந்து பிறந்த வீட்டு சீதனமாக புனித நீர் நேற்று கொண்டு வரப்பட்டது. அலங்காரம் முடிந்ததும் காலை 6 மணியில் இருந்து பக்தர்கள் மலையடிவாரத்தில் இருந்து கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர்.

தொடர்ந்து, கோயிலில் பொங்கல் வைத்தல், கண்ணகி வரலாறு குறித்த வில்லுப் பாட்டு, அன்னதானம், பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். அன்னதான டிராக்டர்கள் நேற்று இரவு குமுளி பகுதிக்கு கொண்டு வரப்பட்டு, இன்று அதிகாலையில் கிளம்பிச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தமிழகம், கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால், இரு மாநிலங்கள் சார்பில் பாதுகாப்பு மற்றும் சுகாதார ஏற்பாடுகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திருவிழாவையொட்டி, தேனி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT