ஆன்மிகம்

திருக்கச்சூரில் சுந்தரர் பாடல் பெற்ற தலமான கச்சபேஸ்வரர் தியாகராஜர் கோயில் கும்பாபிஷேகம்

செய்திப்பிரிவு

திருக்கச்சூர்: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் அடுத்த திருக்கச்சூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அஞ்சனாட்சி அம்பாள் உடனுறை கச்சபேஸ்வரர் தியாகராஜர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் ஆலக்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள தியாகராஜர், அமிர்த தியாகேசர் என்று அழைக்கப்படுகிறார்.

தேவர்களும், அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடையும் போது மத்தாக விளங்கிய மந்தர மலையைத் தாங்கும் சக்தியைப் பெற திருமால் இவ்வாலயத்தில் சிவபெருமானை வழிபட்டார். இங்குள்ள சிவபெருமானை வழிபட்டால் கல்யாண தடை நீங்கி, புத்திரபாக்கியம் கிடைத்து, தீராத நோயும் தீரும் என மக்கள் நம்பி வருகின்றனர்.

சுந்தரரால் பாடல் பெற்ற தலமாக விளங்கும் திருக்கச்சூர் தியாகராஜர் திருக்கோயிலில் 18 ஆண்டுகளுக்குப் பின்பு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த ஓராண்டாகத் திருப்பணிகள் நடைபெற்று வந்தன. இதையொட்டி, கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு கணபதி ஹோமம், சண்டி ஹோமம், கோ பூஜை, மகாலஷ்மி ஹோமம், உத்திர ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டன.

அருள்மிகு அஞ்சனாட்சி அம்பாள் சமேத கச்சபேஸ்வரர் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி திருக்கோயில் திரியோதசி திதி, உத்திர நட்சத்திரம் சித்த போகம் கூடிய சுபதினமான நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கி 11.15 மணிக்குள்ளாக மிதுன லக்னத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பக்தர்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது. அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் சிறு குறு நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் செங்கல்பட்டு, ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT