திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்துதேர் இழுத்தனர்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைப் பெருவிழா விமரிசையாக நடைபெறும். நடப்பாண்டு விழா கடந்த 7-ம் தேதிகொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, உற்சவ அம்மன் தினமும் காலையில் புறப்பட்டு ஆஸ்தான மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல, இரவில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதியுலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழாவின் 10-ம் திருநாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதற்காக உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோயிலிலிருந்து புறப்பட்டு, தேரில் எழுந்தருளினார். தேரில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடத்தப்பட்டு காலை 10.31 மணிக்குத் தேரோட்டம் தொடங்கியது. தேரோடும் வீதிகளில் வலம்வந்த தேர், பிற்பகல் 2.30 மணியளவில் நிலையை அடைந்தது.
தேருக்கு முன்பாக ஏராளமான பக்தர்கள் பால் குடம், தீச்சட்டி, பறவைக் காவடி ஆகியவற்றை எடுத்து வந்து, தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். நேற்று முன்தினம் மாலை முதல் திருவானைக்காவல், கொள்ளிடம் டோல்கேட், பளூர், சமயபுரம் உள்ளிட்ட இடங்களில், பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் நீர்மோர், குளிர்பானங்கள், குடிநீர், அன்னதானம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
தேரோட்ட விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் சி.கல்யாணி மற்றும் அலுவலர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர். சமயபுரம் வரும் பக்தர்களுக்காக சிறப்பு மருத்துவ முகாம்கள், குடிநீர்,தற்காலிக கழிப்பறைகள் ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன. பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், வாகனப் போக்குவரத்தை சீர்படுத்தவும் 1,200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
மேலும், காவல் துறை சார்பில்பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி, கூட்டத்தைக் கண்காணித்தனர். நேற்று பகலில் கடும் வெயில் இருந்ததால், தேருக்கு முன்பாக ஸ்பிரிங்ளர் மூலமாக பக்தர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.