திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் நேற்று வெண்ணெய்த் தாழி உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமி மீது வெண்ணெய் வீசி வழிபட்டனர்.
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் பங்குனிப் பெருவிழா மார்ச் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமிவீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு கோரதத்தில் பாமா, ருக்மணி சமேதராக ராஜகோபால சுவாமி வீதியுலா வந்தார்.
முக்கிய நிகழ்ச்சியான வெண்ணெய்த்தாழி உற்சவம் நேற்று நடைபெற்றது. காலை 6 மணிக்கு ராஜகோபால சுவாமி, வெண்ணெய் திருடும் கண்ணன் அலங்காரத்தில் வெள்ளிக் குடத்தை கையில் ஏந்தி கோயிலில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தொடர்ந்து சுவாமி வீதி உலாபுறப்பட்டு, கோயிலின் உட்பிரகாரம் மற்றும் நான்கு வீதிகளை சுற்றி, மேல ராஜவீதி வழியாக வெண்ணெய்த்தாழி மண்டபத்தை வந்தடைந்தார். அப்போது வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் `கோபாலா, கோவிந்தா' என்ற பக்தி கோஷம் முழங்க சுவாமி மீது வெண்ணெய் வீசி வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து நேற்று மதியம் ராஜகோபால சுவாமிக்கு செட்டியார் அலங்காரமும், இரவு குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது. இன்று (ஏப்.12) பிற்பகல் தேரோட்டம் நடைபெற உள்ளது.