மதுரை: மதுரை சித்திரைத் திருவிழா இன்று (ஏப்.12) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 19-ம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், 20-ம் தேதி திக்விஜயம், 21-ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம், 22-ல் தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
மேலும், இந்த திருவிழாவுடன் இணைந்த, மற்றொரு பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வரும் 22-ம் தேதி கள்ளழகர் எதிர் சேவையும், 23-ம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெற உள்ளன. சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சியைக் காண, ஆற்றின் இருகரைகளிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை வைகை ஆற்றில் மாநகராட்சி, இந்து சமய அறநிலையத் துறை மற்றும் பொதுப்பணித் துறை தொடங்கியுள்ளன.
பொதுப்பணித் துறை வைகை ஆற்றைத் தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளது. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் பகுதியில், இந்து சமய அற நிலையைத் துறை சார்பில் மண்ணைக் கொட்டி சமன்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. விழாவைக் காண வரும் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு பிரத்யேக வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணிகளும் நடக்கின்றன.