ஆன்மிகம்

சுவாமி சரணம்! 12: தாத்தா செஞ்ச புண்ணியம்... பங்குனி உத்திரத்தில் குழந்தை!

வி. ராம்ஜி

கடமைகள் எல்லோருக்கும் உண்டு. அந்தக் கடமையை ஒருபோதும் தட்டிக் கழிக்கக் கூடாது என்கிறது சாஸ்திரம். கடமையில் இருந்து எப்போதும் மீறக்கூடாது என்கிறார்கள் ஆன்றோர் பெருமக்கள். பெற்றவர்களைப் போற்ற வேண்டும். எங்கிருந்தோ வந்த மனைவிக்குத் துரோகம் செய்யாமல் அவளைக் கண்ணும்கருத்துமாக பார்த்துக் கொண்டு, அவளுடன் பொய்புரட்டின்றி வாழவேண்டும். பிறந்த பிள்ளைகளை நல்லவர்களாகவும் மேன்மை மிக்கவர்களாகவும் வாழ்வதற்கான பாதையை அமைத்துக் கொடுக்கவேண்டும். செய்யும் தொழிலில், நேர்த்தியாகவும் நேர்மையாகவும் ஈடுபடவேண்டும். நம்மையும் நம்மைப் பெற்றவர்களையும் இந்த உலகுக்கு அளித்த, கடவுளிடம் மாறாத பக்தி செலுத்தவேண்டும். கடவுளுக்கு நிகரான முன்னோரைத் துதிக்கவேண்டும் என்று பட்டியலிடுகிறது சாஸ்திரம்!

மேலே சொன்ன விஷயங்கள் கம்பசூத்திரமெல்லாம் இல்லை. பிரம்மபிரயத்தனம் செய்யவேண்டும் என்கிற அவசியமெல்லாம் கிடையாது. மிக மிக எளிமையான விஷயங்கள்தான் இவை. சொல்லப் போனால், வாழ்க்கை என்பதற்கான இலக்கணங்களே இவைதான்! இவற்றையே வலியுறுத்தியே, வாழச் சொல்லியே பக்தி போதிக்கிறது. புராணங்கள் எடுத்துரைக்கின்றன. இதிகாசங்கள் உதாரணம் காட்டுகின்றன. மகான்கள் அருளுரைத்திருக்கிறார்கள்.

ஐயப்பனுக்கு மாலையிட்டு விரதமிருக்கிற இந்த வேளையில், நம்மில் பலருக்கும் எழும் கேள்வி... ‘மாலை போட்டு விரதமிருக்கும் போது, சிராத்த காரியங்கள் செய்யலாமா?’ & வருடாவருடம் வருகிற குழப்பம் இது.

சிராத்தமோ தர்ப்பணமோ செய்வது என்பது நம் கர்மா சம்பந்தப்பட்ட காரியம். ஒருவரின் பிறந்தநாள் என்பது நட்சத்திரத்தின்படி கொண்டாடப்படுகிறது. ஆனால் பலர் தேதியைக் கொண்டே கொண்டாடுகிறார்கள். அது வேறு விஷயம். அதேபோல், சிராத்த காரியங்கள், திதி அடிப்படையில் அனுஷ்டிக்கப்படுகின்றன. வருடந்தோறும் தாயாரோ தந்தையோ இறந்த அந்தத் திதியில் அவர்களுக்கான காரியங்களைச் செவ்வனே செய்துவிடவேண்டும் என்கிறது சாஸ்திரம். ஆகவே, சிராத்தம் முக்கியம். தர்ப்பணம் மிக மிக அவசியம்.

பம்பா நதி என்பது புண்ணிய நதி. கங்கை போல், காவிரி போல், தாமிரபரணி போல் புண்ணியத்தை நமக்கு வழங்குகிற நதி. ஐயப்ப பக்தர்களுக்கு பம்பா நதி புதிதல்ல. பம்பையின் மகத்துவமும் தெரியாததல்ல. இந்த பம்பா நதியில், நதிக்கரையில் ஸ்ரீராமபிரான் தன் தந்தை தசரதச் சக்கரவர்த்திக்கான தர்ப்பணத்தைச் செய்தார் என்கிறது புராணம்.

எனவே, சிராத்த நாள் வருகிறதே என்பதற்காக, மாலையணிவதை, விரதம் மேற்கொள்வதைத் தள்ளிப் போடவேண்டாம் என வலியுறுத்துகிறார்கள் குருசாமி மார்கள்.

கல்பாத்தி ஸ்ரீநிவாச ஐயர் என்கிற சாமி அண்ணா, ஒருபோதும் தன் அனுஷ்டானங்களில் இருந்து மாறவே இல்லை; மீறவே இல்லை; தட்டிக் கழிக்கவே இல்லை; குடும்பம், வியாபாரம், ஐயப்ப பக்தி, நித்தியானுஷ்டானங்கள் என முறையே செய்து, தன் வாழ்க்கையையே நெறிப்படுத்திக் கொண்டார். நெறியுடன் வாழ்ந்தார். அதனால்தான் ஐயப்ப பக்தர்களும் தேவஸம்போர்டு நிர்வாகத்தினரு அவரை பெரிதும் மதித்தார்கள். அவரை வழிகாட்டியாகவே கருதினார்கள். கொண்டாடினார்கள்.

இத்தனை அம்சங்களையும் கொண்டவராயினும், எப்போதும் மற்றவரின் நலத்தைப்பற்றியே எண்ணி வாழ்ந்தார். க்ருஹஸ்தனாக இருந்தாலும், மிக இளம் வயதிலேயே மனைவியும் இறந்துவிட்டாலும், தன் பெண்களை மணமுடித்துக் கொடுத்து, அந்தக் கடமைகளை செவ்வனே முடித்து, பற்றற்ற ஒரு துறவி போலத் தான் தன் வாழ்கையை நடத்தினார்.

அவரைக் கண்ட ஒவ்வொரு பக்தனுக்கும் ஆறுதல் கிடைத்தது. அவரைக் கண்டு ஒரு நமஸ்காரம் செய்த பக்தனுக்குக் கூட அளவற்ற ஆசியும், அன்பும் கிடைத்தது.

பாலக்காட்டில் உள்ள அவரது வீடு 365 நாளும் ஆஸ்தீகர்களும், ஐயப்ப பக்தர்களுமாக கல்யாண வீடு போல், களை கட்டியிருந்தது. மலையில் அவர் நடத்தும் அன்னதானத்துக்குப் போட்டியாக வீட்டிலும் ஸமாராதனை நடந்தேறியது.

கருணைக்கும் பக்திக்கும் இருப்பிடமான அவரைக் கண்ட எவரும் வெறும் கையுடன் திரும்பியது இல்லை. அந்த வீட்டுக்குள் நுழைந்த எவரும் சாப்பிடாமல் சென்றதில்லை. காலை மாலை

என்றில்லாமல் நடு இரவிலும் ஐயப்பன்மார்களுக்கு உணவு கிடைக்கும் இடமாக, அவர் வீடு இருந்தது. பக்தர்களுக்கு உற்ற நண்பராகவே அவர் விளங்கினார். பக்தர்களோ... இவரை குருநாதராகவே வரித்துக் கொண்டார்கள்.

இன்றைக்கும் பாலக்காட்டில் சாமி அண்ணாவின் வீடு இருக்கிறது. அந்த வீட்டில் அவர் பூஜித்த சுவாமியின் விக்கிரகங்களும் படங்களும் இருக்கின்றன. அவருடைய பூஜையறையை, பக்தர்கள் கோயிலின் கருவறைக்கு நிகராகவே கருதுகிறார்கள்.

அவருடைய வீட்டுக்கு இன்றைக்கும் வந்து, வணங்கிச் செல்கிற பக்தர்களும் அன்பர்களும் ‘இந்த இடத்தின் சுவரில் கூட ஐயப்பனின் சாந்நித்தியம் குடிகொண்டிருக்கிறது. ஏதோவொரு அதிர்வலை இந்த வீட்டைச் சூழ்ந்து, தெய்வீக உணர்வை பரப்பிக் கொண்டிருக்கிறது’ என்று சிலிர்த்தும் சிலாகித்துமாகச் சொல்கிறார்கள்.

சக மனிதர்களுக்குச் செய்யும் சேவையே ஆண்டவனுக்கான சேவை என்பதை நடைமுறையில் நடத்திக் காட்டினார் சாமி அண்ணா. பூஜை, ஆராதனை, அன்னதானம் மட்டுமல்லாமல், ஏழை எளியோர்க்கு உதவுதல், கல்வியறிவு புகட்டுதல் என அவர் செய்த செயல்கள் ஏராளம்.

இன்னொரு விஷயம் ரொம்பவே வியக்கச் செய்தது.

ஆதரவு ஏதுமற்ற அனாதைப் பிணங்களை தன் கையாலேயே ஸம்ஸ்காரங்கள் செய்து அவர்களை கரையேற்றிய கணக்குகள்... கணக்கிலடங்காதவை.

‘முன்னோர்கள் பேங்க் கணக்குல நமக்காக, ஃபிக்ஸட் டெபாசிட் போட்டு வைச்சு, நமக்காக, நம் வாழ்க்கைக்காக உதவுறாங்களோ இல்லையோ... அவங்களோட புண்ணியம் தான் நமக்கு அவங்க வைச்சிட்டுப் போற மிகப்பெரிய பேங்க் பேலன்ஸ். ஃபிக்ஸட் டெபாசிட். அதுதான் நம்மை நல்லபடியா வாழவைக்கும். நல்ல சத்விஷயங்கள் எல்லாத்தையும் நம்மகிட்ட கொண்டுவந்து சேக்கும்.

சாமி அண்ணா மிகச்சிறந்த புண்ணிய ஆத்மா பரம்பரைல நானும் ஒருத்தன். என் கொள்ளுத் தாத்தா அவர். எங்களுக்கு ஆறரை மாசத்துலயே குழந்தை பிறந்துச்சு. இன்குபேட்டர்ல வைச்சு குழந்தையைக் காபந்து பண்ணின ஒவ்வொரு நிமிஷங்களும் மிகப்பெரிய துயரம். குழந்தையானது பிறந்ததும்... யாருடைய வழிகாட்டுதலும் இல்லாம, தானே செய்ற விஷயம்... தாய்ப்பால் குடிக்கறதுதான். ஆனா குறைப் பிரசவம்...

அதுவும் நடக்கலை.

நமக்குக் குழந்தை பிறந்திருக்கானேன்னு சந்தோஷப்படுறதா. இப்படி குழந்தை பொறந்திருக்கேனு வருத்தப்படுறதா. ஆனா... ஒரு ஜீவன், நம்மால இந்த உலகத்துக்கு வர்றதுக்கு, கடவுள் சிருஷ்டிச்சிருக்கிற விஷயத்தை எப்படி வருத்தமா பாக்கமுடியும்.

எப்பவுமே ஒரு செயல் நடக்கும்போது, அதனோட காரிய காரணங்கள் நமக்குத் தெரியறதில்ல. அதை நாம உணர்றதே இல்ல. உணரவும் முடியாதோ என்னவோ. இப்போ, குழந்தை நல்லாருக்கான். ஆரோக்கியமா இருக்கான். எல்லா குழந்தைகளைப் போலவும் கைகால் அசைச்சு, முகம் பார்த்துச் சிரிச்சு விளையாடுறான். பேர் சொல்லிக் கூப்பிட்டா ஜம்முன்னு திரும்பிப் பாக்கறான். தூக்கலேன்னா கத்தறான். தூக்கச் சொல்லி அழறான். ‘இவனா ஆறரை மாசத்துலயே பிறந்தவன்னு எங்களுக்கே ஆச்சரியம். பொறக்கும் போது, எங்களை கலங்கடிச்சிட்டியேடானு சிரிச்சிக்கிட்டே அவனைக் கொஞ்சுறோம். அப்படிக் கொஞ்சும்போது, பொளேர்னு ஒரு உண்மை புரிஞ்சுது.

சாஸ்தா வழிபாட்டையும் பூஜையையும் பரம்பரைபரம்பரையா செஞ்சிட்டு வர்ற குடும்பம் எங்களுது. வார்த்தைக்கு வார்த்தை சுவாமிசரணம்னு சொல்லிட்டே வளர்ந்த, வாழ்ந்துட்டிருக்கிற பரம்பரை நாங்க! ஊர் ஊரா, நாடுநாடா எங்கெல்லாமோ போய், ஐயப்ப சரிதத்தை உபந்யாசம் பண்ணிட்டிருக்கிறவன் நான்.

ஐயப்பனோட திருநட்சத்திரம் உத்திரம். ஒரு பங்குனி மாச உத்திர நட்சத்திரத்துலதான் ஐயப்பன் அவதரிச்சார்னு சொல்றது சாஸ்தா புராணம். இதோ... என் குழந்தையும் பங்குனி உத்திரத்தன்னிக்குத்தான் பொறந்தான். அப்படி பொறக்கணுங்கறதுக்காகத்தான், ஆறரை மாசத்துலயே, பங்குனி உத்திரத்தன்னிக்கிப் பொறக்க வைச்சிருக்கான் போல ஐயப்ப சுவாமி.

‘கடவுள் கொடுத்த குழந்தைன்னு எல்லோருமே சொல்லுவோம். அந்த வகைல... நிஜமாவே இது கடவுள் கொடுத்த குழந்தைதான். ஐயப்பன் வழங்கிய கொடைதான்!’’ என்று சொல்லிச் சொல்லிப் பூரிக்கிறார் சாமிஅண்ணாவின் கொள்ளுப்பேரன், அரவிந்த் சுப்ரமணியம்!

ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!

- ஐயன் வருவான்

SCROLL FOR NEXT