ஆன்மிகம்

ஜாடிகள் துரோகம் செய்கின்றனவா?

பாவ்லோ கொய்லோ

வி

சுவாசத்தை நேர்த்தியான பீங்கான் ஜாடிகளை விற்கும் ஒரு கடையுடன் ஒப்பிட முடியும். அந்தக் கடைக்கான திறவுகோலை நமக்கு நேசம்தான் கொடுத்திருக்கிறது.

அந்தக் கடையிலிருக்கும் ஒவ்வொரு ஜாடியும் அழகாக இருக்கிறது. ஏனென்றால், அவை தனித்துவத்துடன் இருக்கின்றன. அதுபோலதான், ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு மழைத்துளியும் மலைகளில் உறங்கும் ஒவ்வொரு பாறையும் இருக்கிறது.

நாட்பட்டதன் காரணமாகவோ சில எதிர்பாராத குறைபாடுகளாலோ அலமாரி முறிந்து ஜாடிகள் கீழேவிழுந்து உடைந்துவிடும். அப்போது, அந்தக் கடைக்காரர் தனக்குள் இப்படிச் சொல்கிறார்:

‘இந்த ஜாடிகளைச் சேகரிப்பதற்காக என் வாழ்நாளின் சில ஆண்டுகளையும் நேசத்தையும் முதலீடு செய்திருந்தேன். ஆனால், இந்த ஜாடிகள் எனக்குத் துரோகம் செய்துவிட்டன’.

அந்தக் கடைக்காரர் கடையை விற்றுவிட்டுப் போய்விட்டார். அவர் தனிமையில் விரக்தியுணர்வுடன் வாழும் நபராகிவிடுகிறார். இனி யாரையும் எப்போதும் நம்பக் கூடாது என்ற முடிவுக்கு அவர் வந்துவிடுகிறார்.

ஜாடிகள் உடைந்துவிடும் என்பது உண்மை – அப்போது விசுவாசம் அளிக்கும் வாக்குறுதியும் உடைந்துவிடுகிறது. இந்தக் கட்டத்தில், உடைந்த துண்டுகளைப் பெருக்கி தூக்கி எறிந்துவிடுவதுதான் சிறந்தது. ஏனென்றால், உடைந்துபோனது மீண்டும் சேராது.

ஆனால், நமது நோக்கங்களையும் தாண்டி, சில சமயங்களில் அலமாரி நொறுங்கி விழும். பூகம்பம், எதிரியின் ஆக்கிரமிப்பு, இலக்கற்ற ஒரு நபரின் நுழைவு போன்றவற்றை இதற்குக் காரணங்களாகச் சொல்லலாம்.

ஆண்களும் பெண்களும் ஒருவரையொருவர் இந்த மாதிரியான பேரிடருக்குக் காரணமாகக் குற்றம் சுமத்திக்கொள்வார்கள். யாராவது என்ன நடக்கப்போகிறது என்பதை முன்பே கணித்துச் சொல்லியிருக்கலாம் என்றும் நினைப்பார்கள். அல்லது, ‘நான் பொறுப்பெடுத்திருந்தால், இந்தப் பிரச்சினைகளைத் தவிர்த்திருக்கலாம்’ என்று சொல்வார்கள்.

இவை எவையுமே உண்மையாக இருக்க முடியாது. நாம் அனைவரும் மணல் போல உதிரும் காலத்துக்குள் சிறைப்பட்டவர்கள். இந்த விஷயங்கள் எவையும் நமது கட்டுப்பாட்டுக்குள்ளும் இல்லை.

காலம் கடந்துசெல்கிறது. முறிந்து விழுந்த அலமாரி மறுபடியும் சீராக்கப்படுகிறது.

உலகில் தங்களுக்கான இடங்களைத் தேடிக்கொண்டிருக்கும் புதிய ஜாடிகள் அந்த இடத்தை நிரப்புகின்றன. எல்லாமே நிலையற்றது என்பதைப் புரிந்துவைத்திருக்கும் புதிய கடைக்காரர், தனக்குள் இப்படிச் சொல்லிக்கொள்கிறார்: ‘அந்தச் சோக சம்பவம், எனக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது. அதை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்வேன். நான், அதுவரை கேள்விப்படக்கூடச் செய்யாத கலைப் படைப்புகளைத் தேடிக் கண்டுபிடிக்கப்போகிறேன்’.

(பாவ்லோ கொய்லோ எழுதிய ‘தி மேனுஸ்கிரிப்ட் ஃபவுண்ட் இன் அக்ரா’ (The Manuscript Found in Accra) நாவலிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதி)
தமிழில்: என். கௌரி

SCROLL FOR NEXT