சென்னை ஈசிஆர் சாலை அக்கரையில் உள்ள ‘இஸ்கான்’ கோயிலில் நேற்று கவுர பூர்ணிமாவை முன்னிட்டு, சைதன்ய மஹாபிரபு மற்றும் நித்யானந்தருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. 
ஆன்மிகம்

சென்னை ஈசிஆரில் உள்ள இஸ்கான் கோயிலில் கவுர பூர்ணிமா விழா: வெகுவிமரிசையாக நடந்தது

செய்திப்பிரிவு

சென்னை: ஈசிஆரில் உள்ள இஸ்கான் கோயிலில் கவுர பூர்ணிமா விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. சுமார் 500 வருடங்களுக்கு முன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவாக இப்பூவுலகில் அவதரித்தார். இந்த அவதாரத்தின் விசேஷம் பகவான், பக்தராக தோன்றியதாகும்.

அதாவது கிருஷ்ண பக்தர் ஒருவர் எவ்வாறு அவரது நாமத்தை ஜபிக்க வேண்டும், எவ்வாறு பக்தி நெறியுடன் வாழ வேண்டும் என்பதை இந்த அவதாரத்தின் மூலம் உணர்த்தினார். பொன்னிறத்தில் அவதரித்ததால் ஸ்ரீ கவுரங்கர் என்றும் அழைக்கப்பட்டார்.

‘கவுர’ என்றால் பொன்னிற மேனியுடைய ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவையும், ‘பூர்ணிமா’ என்றால் அவர் அவதரித்த பவுர்ணமி நாளையும் குறிக்கிறது. எனவே ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் அவதாரத் திருநாள் ‘கவுர பூர்ணிமா’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

அந்தவகையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலை, அக்கரையில் உள்ள இஸ்கான் கோயிலில், கவுர பூர்ணிமா விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி, காலை 4 மணிக்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது. அதனை தொடர்ந்து, 7.45 மணிக்கு சிருங்கர் ஆரத்தி, 8 மணிக்கு ஸ்ரீமத் பாகவதம் வகுப்பு, காலை 10 மணிக்கு கீர்த்தனை மேளா நிகழ்வுகளும் நடந்தன.

பின்னர், மாலை 5.30 மணிக்கு ஸ்ரீ கவுர நிதை அபிஷேகமும், மாலை 6.15 மணிக்கு சைதன்ய கரிதாமிர்தம் குறித்த வகுப்பும், இரவு 7 மணிக்கு கவுரா ஆரத்தியும் நடந்தது.

கவுர பூர்ணிமா நிகழ்வையொட்டி, ஸ்ரீ சைதன்யா மஹாபிரபுக்கு பஞ்சாமிர்தம், பல வண்ண மலர்கள், பஞ்சகவ்யா மற்றும் பல்வேறு வகையான பழச்சாறுகள் ஆகியவற்றின் புனித கலவையால் அபிஷேகம், பிரம்மாண்ட மஹா ஆரத்தி நடைபெற்றது. இந்த விழாவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், இரவு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT