ஓசூர்: ஓசூரில் ஶ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் கோயிலில் பங்குனி மாத தேர்திருவிழாவில் 3 மாநில பக்தர்கள் பங்கேற்று தேரின் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.
ஓசூர் தேர்பேட்டையில் மலை மீது உள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 19-ம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் மலையிலிருந்து அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்திகளான அம்பாளும், சிவபெருமானும் மலை அடி வாரத்தில் உள்ள ஸ்ரீ கல்யாண சூடேஸ்வர் கோயிலில் எழுந்தளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதனைத் தொடர்ந்து தினந்தோறும் சந்திர சூடேஸ்வரர் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
விழாவில் முக்கிய நாளான இன்று அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட தேரில் மரகதாம்பாள் உடனுறை சந்திர சூடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பின்னர் எம்எல்ஏ பிரகாஷ், மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன் ஆகியோர் தேரின் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து தமிழகம், கர்நாடக, ஆந்திரா ஆகிய 3 மாநில பக்தர்கள் கலந்து கொண்டு சிவ சிவா என பக்தி கோஷங்கள் முழங்க தேரின் வடம் பிடித்து 4 மாடவீதிகள் வழியாக இழுத்து சென்றனர்.
அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் தேரின் மீது உப்பு, மிளகு, வாழைப்பழம் ஆகியவற்றை தேர் மீது வீசி நேர்த்தி கடன் செலுத்தினர். தேர் திருவிழாவையொட்டி ஓசூர் நகர் முழுவதும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உள்ளூர் பொது மக்கள் அன்ன தானம், நீர் மோர், தர்பூசணி, தண்ணீரை வழங்கினர்.
பக்தர்களின் பாதுகாப்பு கருதி 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டு, 3000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். அதே போல் பக்தர்களின் வசதிக்காக மாநகராட்சி சார்பில் மொபைல் டாய்லெட் அமைக்கப் பட்டிருந்தது. மாநகராட்சி ஊழியர்கள் தூய்மை பணியில் ஈடுப்பட்டு வந்தனர்.