சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்ப சுவாமி கோயிலில் வரும் 27-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி கோயிலில் கணபதி ஹோமம் நேற்று நடைபெற்றது. | படம்: எஸ்.சத்தியசீலன் | 
ஆன்மிகம்

ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் மார்ச் 27-ல் கும்பாபிஷேகம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. வடசபரி என்று போற்றப்படும் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் பதினெட்டு படியுடன் பரிவார தெய்வங்களுடன் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஐயப்ப சுவாமிக்கும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள விநாயகர், நவக்கிரக தெய்வங்கள், ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கும் புது பொலிவுடன் கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், இக்கோயிலின் 4-வது கும்பாபிஷேக விழா, சிறப்பு பூஜைகளுடன் நேற்று தொடங்கியது.

காலை 7 மணிக்கு விநாயகர் பூஜை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கோபூஜை, தன பூஜை உள்ளிட்டவை நடத்தப்பட்டன. கோபூஜையின்போது, கோமாதாவுக்கு மாலை, வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

அதைத் தொடர்ந்து, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மஹா பூர்ணாஹுதி, வாஸ்து சாந்தி ஹோமம், தீபாராதனை நடைபெற்று, நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கும்பாபிஷேக திருப்பணி குழு தலைவர் ஏ.சி.முத்தையா, கோயில் அறங்காவலர்கள், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். புதிதாக அமைக்கப்பட்டிருந்த யாக சாலையில் மாலை 5 மணிக்கு தொடங்கி ம்ருத்சங்கிரஹணம், அங்குரார்ப்பணம் (நவ தானியங்களை முளைகட்டுதல்), ரக்‌ஷாபந்தனம் (காப்புகட்டுதல்) ஆகியவை நடத்தப்பட்டன. 6 மணி அளவில் முதல்கால யாகசாலை பூஜைநடைபெற்றது.

பக்தர்களுக்கு பிரசாதம்: இரவு 8.30 மணிக்கு மஹாபூர்ணாஹுதியுடன் தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதையடுத்து, இன்றும், நாளையும் (மார்ச் 25, 26) விசேஷசந்தி 2, 3, 4, 5-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளன.

இதைத் தொடர்ந்து, 27-ம் தேதி புதன்கிழமை காலை 7.15 மணிக்கு நடைபெறும் விக்னேஸ்வர பூஜையை தொடர்ந்து, காலை 10 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெறுகிறது. பின்னர், கும்பாபிஷேகம் 10.45 மணி அளவில் நடைபெற உள்ளது. இரவு 7 மணி அளவில் ஐயப்பசுவாமி வெள்ளி ரதத்தில் வீதிஉலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

SCROLL FOR NEXT