பங்குனி உத்திர திருவிழா 
ஆன்மிகம்

பங்குனி உத்திர திருவிழா | கழுகுமலை கோயிலில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்

எஸ்.கோமதி விநாயகம்

கோவில்பட்டி: கழுகுமலை கழுகாசல மூர்த்தி திருக்கோயிலில் நடந்து வரும் பங்குனி உத்திர திருவிழாவில் இன்று (சனிக்கிழமை) காலை தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

தமிழகத்தின் தென்பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில், தினமும் காலை, மாலை நேரங்களில் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

திருவிழாவின் 7-ம் நாளான நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் புஷ்பாஞ்சலி பூஜையும், அதைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் சிகப்பு மலர் சூடி சிவன் அம்சமாக (ருத்திரர்) எழுந்தருளி வீதியுலாவும், வெள்ளை மலர் சூடி பிரம்மன் அம்சமாக எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று அதிகாலை 7 மணிக்கு பச்சை சார்த்தி திருமால் அம்சமாக வள்ளி, தெய்வானையுடன் மலையை சுற்றி கிரிவலம் வந்தனர்.

விழாவின் 9-ம் திருநாளான இன்று (சனிக்கிழமை) காலை முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல், விளா, காலசந்தி ஆகிய பூஜைகள் நடந்தன. காலை 7 மணிக்கு சண்டிகேஸ்வரர் சட்ட ரதத்திலும், விநாயகப் பெருமான் கோ ரதத்திலும், வைரத் தேரில் வள்ளி தெய்வானையுடன் கழுகாசலமூர்த்தியும் எழுந்தருளினர்.

இதைத் தொடர்ந்து காலை 10.30 மணிக்கு கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், பேரூராட்சி மன்றத் தலைவர் அருணா சுப்பிரமணியன், துணை தலைவர் சுப்பிரமணியன், கழுகுமலை செம்ம நாட்டார் தேவர் சமுதாய தலைவர் வன்னியன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். முதலில் சட்ட ரதமும் கோ ரதமும் பக்தர்களால் படம் பிடித்து இழுக்கப்பட்டது. கோ ரதம் காலை 11.40 மணிக்கு நிலையத்தை வந்தடைந்தது. தொடர்ந்து 12.05 மணிக்கு வைர தேர் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

விழாவில் கழுகுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” என்ற கோஷங்கள் முழங்கியவாறு வடம் பிடித்து தேர் இழுத்தனர். பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT