பங்குனி திருவிழாவை முன்னிட்டு, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம் நேற்று விமரிசையாக நடைபெற்றது, படம்: எஸ்.சத்தியசீலன் 
ஆன்மிகம்

மயிலை கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம் - ‘சம்போ மகாதேவா’ கோஷத்துடன் கோலாகலம்: இன்று அறுபத்து மூவர் விழா

செய்திப்பிரிவு

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். அறுபத்து மூவர் விழா இன்று நடைபெறுகிறது.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்,மேற்கு திசை நோக்கி அமைந்திருக்கும் சிவாலயங்களில் சிறப்பு வாய்ந்த தலமாகும். இக்கோயிலில் இந்த ஆண்டுக்கான பங்குனி பெருவிழா கடந்த 16-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முதல் நாளன்று பவளக்கால் விமானத்தில் கபாலீஸ்வரர் வலம் வந்து அருள்பாலித்தார்.

பின்னர், அம்மை மயில் வடிவில் காட்சி தருதல் நிகழ்ச்சியும், கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், முருகர் வீதியுலா நிகழ்வும் நடைபெற்றது. தொடர்ந்து அதிகார நந்தி, சவுடல் விமானம் உள்ளிட்ட வாகனங்களில் மாட வீதிகளில் சுவாமி உலா வந்தார். இந்நிலையில், பங்குனி தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

இதையொட்டி, காலை 8 மணிஅளவில் திருத்தேருக்கு கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் எழுந்தருளினர். காலை 9 மணி அளவில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, தேரோட்டம் தொடங்கியது. 96 அடி உயரம், 300 டன் எடை கொண்ட தேரை, ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ‘சம்போ மகாதேவா’ என்ற கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்.

4 மாட வீதிகளில் வலம்வந்த தேர், பிற்பகல் 1.30 மணி அளவில் நிலையை வந்தடைந்தது. சிவ வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு, 1,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தனியார் அமைப்புகள் மூலம் சாலையோரத்தில் பந்தல்கள் அமைக்கப்பட்டு, பக்தர்களுக்கு நீர்மோர், பானகம் வழங்கப்பட்டது. நேற்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து, சுவாமியை வழிபட்டு சென்றனர்.

பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அறுபத்து மூவர் விழா இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் தொடங்கி நடைபெற உள்ளது. வெள்ளி விமானத்தில் 63 நாயன்மார்களோடு இறைவன் வலம் வரும் காட்சியை காண, சென்னை, புறநகர் பகுதிகள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால், சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

25-ம் தேதி இரவு 7.30 மணி அளவில் திருக்கல்யாண உற்சவமும், 27-ம் தேதி விழா நிறைவு திருமுழுக்கும் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 5-ம் தேதி வரை விடையாற்றி விழா உற்சவம் நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT